(Published in April 1985 issue of IOBian)
பாஞ்சாலி-துரியோதனன்-பாண்டவர்கள்
(Published in December 1981 issue of IOBian)
வாழ்க்கை முயற்சி வழியா, விதி வழியா?
(Published in Jan-Mar 1998 issue of IOBian)
Demonetisation
(Published in March, 2017 issue of Management Accountant)
Make in India
(Published in May, 2016 issue of Management Accountant)
வஸந்த காலம் வருமோ? நிலை மாறுமோ?
(2013ஆம் ஆண்டில் எழுதப்பட்டது)
“கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் வரும்” என்றுதான் எண்ணத் தோன்றுகிறது, நாளும் செய்தித் தாளில் வரும் செய்திகளைப் பார்க்கும் போது. ஒரு வேளை காலன் வரும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்பதைத்தான் காலம் என்று சொல்லி வைத்தார்களோ! இருக்கட்டும், நல்ல காலம் வரும் என்றே நம்புவோம்.
2012ஆம் ஆண்டின் இறுதியில் புதுதில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த இளம் பெண்ணின் நினைவுகளிலிருந்து மீள்வதற்குள்ளாகவே 2013 ஃபிப்ரவரியில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் அமில வீச்சினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கிறார்கள். ஒரு பெண் அமிலத்தினால் முகம் முழுவதும் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் வலியில் துடித்திருக்கிறார். மற்றொரு பெண் இடுப்பிற்குக் கீழ் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் வேதனையில் வெந்திருக்கிறார். இடையிடையே விபத்துக்களுக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கும் பலியாகும் பிஞ்சுக் குழந்தைகள் பற்றிய செய்திகள் உள்ளத்தைப் பிழிகின்றன. “கோடி துக்கம் ஒரு குழந்தை முகத்தில் மறையும்” என்று எந்தக் குழந்தைகளைக் கொண்டாடுகிறோமோ அந்தக் குழந்தைகளும் எந்த இளம் வயதினரால் முன்னேற வேண்டும் என்று இந்தியா காத்திருக்கிறதோ அந்த இளம் வயதினரும் சமீப வருடங்களில் மிகவும் கொடுமையாகப் பாதிக்கப்பட்டு பலியாகி வருகிறார்கள். முன்பெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாக மட்டும் நடைபெற்று சில செய்தித்தாள்களில் மாத்திரம் முதல் பக்கங்களில் இடம் பெற்ற “கொலை!”, “கொள்ளை!!”, “பாலியல் பலாத்காரம்!!!” போன்ற செய்திகள் இப்போது நாளும் கொத்துக்கொத்தாக நிகழ்ந்து எல்லா செய்தித்தாள்களின் முதல் பக்க செய்திகளாகவும் முக்கிய செய்திகளாகவும் ஆகிவிட்டன. இந்த திகைக்க வைக்கும் தருணங்களில் புத்தர் மாதிரி விவேகத்தைத் தேடிப் புறப்பட்டுவிட முடியாதா என்ற ஏக்கம் பிறக்கிறது. ஆனால் புத்தருக்கு இருந்த மன உறுதி நம்மிடம் இல்லாததால் நாம் எதையும் துறக்க முடியாமல் மேலும் மேலும் உழன்று கொண்டிருக்கிறோம்.
உலகத்திற்கெல்லாம் தாயாக எந்த பராசக்தியை வணங்குகிறோமோ அந்தத் தாய்மைக்கு ஏதுவான கர்ப்பப் பையும் அதை ஒட்டிய வயிற்றுப் பகுதியும் எவ்வளவு நுண்மையானவை! பாலியல் பலாத்காரம் என்பதை மறந்து காங்ரீன் உருவாகும் அளவுக்கு ஏற்படுத்தப்பட்ட உடற்காயம் என்று நினைத்துப் பார்த்தாலே அது எப்பேர்ப்பட்ட கொடுமை!
அதைச் செய்தவர்கள் யார்? வேற்று கிரகத்து மனிதர்களா?‘ தீமைகள் செய்ய மட்டுமே’ என்று பிறந்தவர்களா? நம்மைப் போல பிறந்து வளர்ந்து நம்மில் ஒருவராக நடமாடுபவர்கள்தான். ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் ஒரு பாடலில் வருவது போல மனிதர்களே புலியாகவும் ஆடாகவும் மாறி மாறி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். ஒரு வேளை அந்த ஆறு பேர் வேறு ஓர் சந்தர்ப்பத்தில் பஸ்ஸில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்திருந்தால் எழுந்து இடம் கொடுத்திருப்பார்கள். ஒரு முதியவர் தாங்க முடியாத சுமையுடன் பஸ்ஸில் ஏற முற்பட்டால் சுமையை ஒரு கையில் வாங்கிக் கொண்டு இன்னொரு கையால் அவரைப் பஸ்ஸில் ஏற்றி விட்டிருப்பார்கள். சாலை விபத்துக்களின் போது ஓடிச் சென்று உதவியிருப்பார்கள். குடிபோதையிலும் கண நேரத் தடுமாற்றத்திலும் முழு வாழ்க்கையையும் தொலைத்து விட்டுநிற்கும் இவர்களைப் பார்த்தாவது மற்றவர்கள் தங்களைக் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொள்வார்களா?
ஹிந்தி மொழியில் மைதிலி சரண் குப்தா என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். அவர் புராண மற்றும் சரித்திரக் கதா பாத்திரங்களில் மிகவும் உயர்ந்த, ஆனால் அவ்வளவாகப் பேசப்படாத, இலக்குவனின் மனைவி ஊர்மிளாவையும் புத்தரின் மனைவி யசோதராவையும் கதாநாயகிகளாக வைத்துப் படைப்புகளை உருவாக்கினார். அதே போல் மஹாபாரதத்து அர்ஜுனனும் ஒரு நாயகனாக வைத்துப் போற்றத்தக்கவன். மிகவும் உயர்ந்த புராணக் கதாபாத்திரமான அர்ஜுனனை நாம் உரிய நேரங்களில் உரிய கோணத்தில் ஞாபகப் படுத்திக் கொள்ளத் தவறி விடுகிறோம். ‘பற்றற்று கடமைகளைச் செய்ய வேண்டும்’ எனக் கண்ணன் உபதேசித்த கீதையைக் கேட்பதற்கு முன் நாம் முதலில் அர்ஜுனனின் மன நிலையிலாவது இருக்க வேண்டுமல்லவா? படிப்படியாகத்தானே மேலே போக முடியும்? பொதிகை தொலைக்காட்சியில் ‘வாலிப வாலி’ என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ‘எனக்கு மஹாபாரதத்தில் பிடித்த பாத்திரம் அர்ஜுனன்தான்’ என்று கவிஞர் வாலி அவர்கள் கூறியது என்னுடைய கருத்துக்குக் கிடைத்த ஆமோதிப்பு போல எனக்கு மகிழ்ச்சி உண்டாக்கியது.
‘என்னுடைய உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் முதலியவர்களுக்குத் துன்பம் அளித்து எனக்கு எந்த வெற்றியும் வேண்டாம். எனக்கு அரசாங்கமும் ஆட்சியும் வேண்டாம். நான் யாசித்து உண்டால் கூடப் பரவாயில்லை. என்னால் இவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது.’ என்கிற அர்ஜுனனின் இந்த மனநிலை கூட எவ்வளவு உயர்ந்தது! அர்ஜுனன் நினைவில் வந்தால் கணவனால் மனைவியைக் கொல்ல முடியாது; விரும்பிய பெண் கிடைக்காதபோது காதலனால் அவள் மீது அமிலம் வீச முடியாது; நண்பர்கள் கத்தியால் குத்திக்கொள்ள மாட்டார்கள்; எளியவர்கள் ஏமாற்றப்பட மாட்டார்கள்; ஆசிரியர்கள் கொல்லப்பட மாட்டார்கள்; நாட்டில் கொலைகளும் தாக்குதல்களும் கையாடல்களும் சுரண்டல்களும் நயவஞ்சகங்களும் குறையும்.
’ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை இருக்கிறது’ என்கிறது நியூட்டனின் இயக்கத்திற்கான மூன்றாம் விதி. “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்” என்ற திருக்குறளும் இந்த விதியைத்தான் கூறுகிறது. நம்முடைய புராணக்கதைகளில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற நீதி வலியுறுத்தப் பட்டிருக்கிறது. பெற்றோர்களும் பள்ளிகளும் பிள்ளைகளுக்கு நீதி நெறிக் கருத்துக்களைப் புகட்டி வந்தால் அவற்றில் சிந்தியது சிதறியது போக மீதமுள்ளவற்றை அனுசரித்து நடந்தாலே அப்பிள்ளைகளால் எல்லா வயதிலும் அறத்தைக் கடைப்பிடிக்க முடியும்.
ஒவ்வொரு முறையும் அவலங்கள் நடந்த பிறகு அவை நிகழ்ந்ததற்கான காரணங்களைப் பற்றி சில பேர் கருத்து கூறுகிறார்கள்.
ஹரியானா மாநிலத்தில் தொடராகக் பாலியல் பலாத்காரங்கள் நடந்தபோது அங்குள்ள கப் பஞ்சாயத்தினர் ‘பதினைந்து அல்லது பதினாறு வயதில் திருமணம் செய்துவிடுவதுதான் பாலியல் பலாத்காரங்களை ஒழிப்பதற்கான தீர்வு’ என்றார்கள். அம் மாநில முந்நாள் முதல்வர் திரு ஓம் பிரகாஷ் சௌதாலாவும் அதை ஆதரித்துப் பேசினார். மேற்கு வங்க மாநிலத்தில் அத்துயரங்கள் நிகழ்ந்தபோது முதல்வர் செல்வி மமதா பானர்ஜி ஆண்களும் பெண்களும் முன்பை விடஅதிக சுதந்திரமாகப் பழகுவதால் பாலியல் பலாத்காரங்கள் அதிகமாகின்றன என்றார். புதுதில்லி சம்பவத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தலைவர் இவையெல்லாம் ‘நகரங்களில்தான் நடக்கின்றன, கிராமங்களில் நடப்பதில்லை‘ என்று கூறி பிரச்சினையை மிகவும் எளிமைப்படுத்தி விட்டார். இக்கருத்துக்கள் கண்டனத்துக்குள்ளானதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால் ‘பெண்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்’ என்ற கருத்துக்கள் வெளிப்படும் போதும் கண்டனக் குரல்கள் கிளம்புவதுதான் வியப்பாக இருக்கிறது. “கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்” என்கிற யோசனை பெண்களின் உரிமையைப் பறிப்பதற்காக பெண்களுக்கு மட்டும் கூறப்படும் கருத்து அல்ல. கடந்த வருடங்களில் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து தாக்குதல்களுக்கு ஆளாகி சில உயிரிழப்புகள் ஏற்பட்ட போதும் ‘இந்தியாவிலிருந்து செல்லும் மாணவர்கள் தங்களது ஐஃபோன் முதலிய விலை உயர்ந்த மின் உபகரணங்களுடன் பொது இடங்களில் ஆரவாரமாக நடந்து கொள்ளும் போது ஆபத்துக்களுக்கு உள்ளாகிறார்கள்’ என்ற கருத்து கவனிக்கத்தக்கதாக இருந்தது. சாலையில் சில குடிகாரர்கள் ரகளை செய்து கொண்டிருக்கும் போது ’எனக்கு அந்தப் பகுதியிலும் நடக்க உரிமை இருக்கிறது’ என்று விவேகம் உள்ளவர் அவர்கள் நடுவில் நடந்து செல்வதில்லை அல்லவா? கூடுமான வரை அந்தக் குடிகாரர்களின் கவனத்தைக் கவராமல் தற்செயலாக நடப்பது போலத் தங்கள் பாதையை மாற்றித்தானே நடந்து செல்வார்கள்?
உரிமைக்கான குரல்கள் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருக்க உரிமையை விட மேலானதான தன்மானம் பந்தாடப்படும் போது மட்டும் ஏன் அமைதி காக்கப்படுகிறது என்று புரியவில்லை. ஒரு திரைப்படத்தில் ஒரு ஸெல்ஃபோன் கடையில் ‘இது பெண்களுக்கான ஸெல்ஃபோன்’ என்று ஒன்றை எடுத்துப் போடுவார்கள். ‘அதிலிருந்து மிஸ்ட் கால் மட்டும்தான் போகும்’ என்று விளக்கம் தருவார்கள். ஒரு நட்சத்திர எழுத்தாளர் எழுதிய கதையில் வரும் ஒரு பெண் எப்போதும் தன் நண்பனிடம் சொல்லியே தன் ஸெல்ஃபோனை ‘ரீசார்ஜ்’ செய்து கொள்வாள்; இத்தனைக்கும் அவள் அவனுக்கு ‘மிஸ்ட் கால்’ மட்டுமே கொடுப்பாளாம். ‘கிசுகிசு’க்களில் வரும் நடிகைகளும் நகைச்சுவைத் துணுக்குகளில் வரும் காதலிகளும் தங்கள் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி அவர்களின் பணத்தைக் கறப்பார்கள். காலத்தின் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் திரைப்படங்கள், பத்திரிகைகள் முதலிய ஊடகங்கள் விதி விலக்குகளை இலக்கணம் போல் காட்டிச் செல்லக்கூடாது. தனது தன்மானத்தை விட்டுக் கொடுத்து ஆபத்துக்களில் சிக்கிக் கொள்ள எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். அறியாமை காரணமாக எங்காவது நடைபெறும் தவறைத் தற்காலப் பெண்களின் பொதுவான அணுகுமுறை போல் காட்டப்படுவது கண்டிக்கப்படவேண்டும்..
“உன் தலையில் ஆணி அடித்து எழுதப்பட்டிருக்கும் கருத்துக்களைக் களைந்து விடு” என்று ‘பெண்களிடம் கூறப்படும் நவீன கருத்தும் அவர்கள் தலையில் புதிதாக ஆணி அடிக்கும் முயற்சியே. உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற விரும்பும் ஒரு பெண் முதலில் செய்ய வேண்டிய செயல் தன்னைத் அறிவுத் தேடலில் ஈடுபடுத்திக் கொள்வதே. அறிவு என்பதை மதிப்பெண்களாலும் பட்டங்களாலும் பதவிகளாலும் அளக்க முடியாது. அது உலக நடப்புகளைத் தெரிந்து கொண்டு, சான்றோர்களின் கருத்துக்களை அறிந்து, தனது சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் ஒரு தொடர் முயற்சி. தன்னைப் பிறர் தவறான வழிக்கு அழைத்துச் செல்லாதிருக்கப் பெண் தன்னைத் தானே தயார் செய்து கொள்ள வேண்டும். எல்லாக் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டுவந்து தனக்கு எது சரியாக இருக்கும்என்று சிந்தித்து ‘அள்ளு அள்ளு, தள்ளு தள்ளு‘ என நல்லதை அள்ளி தேவையற்றதைத் தள்ளித் தன் பாதையை ஒவ்வொரு பெண்ணும் தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ‘கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த சொல்லும் கூட வராது‘ அல்லவா?
குழந்தைகள் மீதும் பெண்கள் மீதும் இழைக்கப் படும் அநீதிகளுக்குப் பலரும் கூறிய பல காரணங்களுக்கிடையில், ‘குடியே எல்லாவற்றிற்கும் காரணம்’ என்ற கருத்தும் கூறப்பட்டது. ஆனந்த விகடனின் தலையங்கத்தில் எழுதியிருந்தது போல் நம் முதல்வரிடம் இருக்கும் பேனாவின் மைத்துளி பூரண மது விலக்கிற்கான நல்லாணையைப் பிறப்பித்தால் எவ்வளவு ஆக்கபூர்வமாக இருக்கும்!
ஸங்கீதமே!வைபோகமே!!
(2012ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சிறுகதை)
அக்ஷரா-ஸ்வரா கர்நாடக இசை பாடும் புகழ் பெற்ற சகோதரிகள். அவர்களது அண்ணனும் தம்பியும் முறையே வயலின் மற்றும் மிருதங்க வித்வான்கள். அவர்கள் நால்வரும் ஒருசேர மேடையேறிச் செய்யும் கச்சேரிகள் இசைப் பிரியர்களின் கண்ணுக்கும் காதுக்கும் மனதுக்கும் விருந்தாக அமையும்.
திருமணத்திற்குப் பிறகும் சகோதரிகளின் இசைக் கச்சேரிகள் தொடர வேண்டும் என்று விரும்பிய பெற்றோர் அதற்கேற்றவாறு அதிகக் கவனம் செலுத்தி மாப்பிள்ளைகளைத் தேடத் தொடங்கினர். அவர்களுக்குப் புகழ் பெற்ற திரை உலக இரட்டையர் கவிமணி-இசைமணி வரன்களைப் பற்றிய விவரம் தெரிய வந்தது.
கவிமணி முன்னணி திரைப்படப் பாடலாசிரியர். இசைமணி முன்னணி திரை இசை அமைப்பாளர்.
ஜாதகங்கள் பார்த்த போது அக்ஷரா-கவிமணி மற்றும் ஸ்வரா-இசைமணி பொருத்தங்கள் நன்றாக இருப்பதாகத் தெரிய வந்தன. பரஸ்பரம் இரு வீட்டாருக்கும் பிடித்துப் போகவே இரு திருமணங்களும் ஒரு மாத இடைவெளியில் இனிதே நடந்தேறின.
அக்ஷரா கவிமணியின் பரம ரசிகையும் விமர்சகியுமாக இருந்ததால் அவன் தன் திரைப்படப் பாடல்கள் உருப்பெற்ற பிறகு அவளிடம் காட்டி அபிப்ராயம் கேட்பது வழக்கம். அவளும் உற்சாகமாகத் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு அவனை ஊக்கப் படுத்துவாள். சில சமயங்களில் அப்பாடல்களைக் கர்நாடக இசை ராகங்களில் பாடிக்காட்டி கவிமணியை மகிழ்விப்பாள்.
திரை இசை அமைப்பாளர் இசைமணி ஸ்வராவைப் புதுப்புது இடங்களுக்கு அழைத்துச் செல்வான். அவன் அவளுக்குப் பல நவீன இசைக் கருவிகளை வாங்கிப் பரிசளிப்பது வழக்கம். இசை உலகின் அதி நவீனத் தொழில் நுட்பங்களை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைப்பான். இருவரும் சேர்ந்து நடப்பார்கள், சேர்ந்து சிரிப்பார்கள்.
போகப்போக அக்ஷரா சற்று வித்தியாசமாக உணர ஆரம்பித்தாள். இப்போதெல்லாம் கவிமணி சில பாடல்களை அர்த்தமில்லாத வெற்றுச் சொற்களை இட்டு நிரப்பினான். காதல் பாட்டுகள் என்ற பெயரில் தமிழ்ப் பண்பாட்டுக்கும் இந்தியப் பண்பாட்டுக்கும் ஒத்து வராத கருத்துக்களை வெளிப்படுத்தினான். குடித்துவிட்டுப் பாடி ஆடுவது போன்ற பாடல்கள் வேண்டுமென்று அவனைத் தேடி வர ஆரம்பித்தார்கள். அவளுக்கு அவனது பாடல்கள் இனிக்கவில்லை. அவனும் பாடல்களை அவளிடம் காட்டி கருத்து கேட்பதில்லை. அவர்களுக்கிடையே பாலமாக இருந்த பாடல் மொழி பிசிறடிக்க ஆரம்பித்த பிறகு அக்ஷரா வாடி மெலிய ஆரம்பித்தாள். புகழும் பணமுமே குறிக்கோளாக இருந்த கவிமணி அவளது வாட்டத்தையும் தேய்வையும் கண்டு கொள்ளவில்லை.
இசைமணியின் தொழில் ஆர்ப்பாட்டமாக சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. அவன் ஸ்வராவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தினான்.
அக்ஷராவின் வாட்டம் கண்டு உடன் பிறந்தவர்கள் மனம் வருந்தினார்கள்.
“அக்ஷரா, உன்னுடைய ஏமாற்றம் எனக்குப் புரிகிறது. உன்னுடன் கூடவே இருந்தும் என்னால் உனக்கு எந்த விதத்திலும் உதவ முடியவில்லை. நான் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு உறுத்தலாக இருக்கிறது.” என்று அக்காவிடம் ஸ்வரா அழுதாள்.
“போடீ அசடே, அழாதே. நான் உனக்காக சந்தோஷப்படுகிறேன்.” என்ற படி அக்ஷரா தங்கையின் கண்ணீரைத் துடைத்தாள்.
“நீதான் எனக்கு ஆதாரம், அக்ஷரா. எனக்கு பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’ என்னும் கவிதையின் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன.” என்ற ஸ்வராவின் குரல் தழுதழுத்தது.
“எந்த வரிகள்?”
“’அவள் இருக்கின்றாள் என்ற ஒன்றே போதும்’ என்ற வரிகள்.” என்ற ஸ்வரா விம்மினாள். அவளது கண்ணீர் பெருக்கெடுத்தது..
“கவலைப்படாதே . திரும்பவும் நல்ல காலம் வரும்” எனத் தங்கையை அக்ஷரா தட்டிக்கொடுத்தாள்.
கூடாங்குளம்
(2012ஆம் ஆண்டில் எழுதப்பட்டது)
சங்கர் கூடாங்குளத்தில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். அவனது மனைவி கோமதி அங்கு ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறாள்.
சங்கர் பள்ளியில் படிக்கும் நாட்களிலிருந்தே அணு மின் உலை அந்த ஊரின் பேச்சுகளோடும் நினைவுகளோடும் கலந்திருந்த ஒரு பெயர். ரஷ்ய நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் கட்டப் பட்டு வருகிறது.
ஆனால் மார்ச் 2011ல் ஜப்பானில் நிகழ்ந்த பூகம்பமும் சுனாமியும் அவை அணு மின் உலைகளுக்கு ஏற்படுத்திய பேராபத்தும் கூடாங்குளத்தில் திடீர்த் திருப்பங்களைக் கொண்டு வந்தன. அணுமின் உலைக்கு எதிர்ப்புப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. கோமதியும் சங்கரும் அப்போராட்டங்களில் ஆரம்பத்தில் வீராவேசத்துடன் கலந்து கொண்டனர். போராட்டங்கள் மாதக் கணக்கில் நடந்து கொண்டிருந்தன.
அணுமின் உலையை ரொம்ப நாட்களுக்கு மூடி வைக்க முடியாது என்றும் விஞ்ஞானிகளையும் பொரியியல் வல்லுநர்களையும் ரொம்ப நாட்களுக்குச் சும்மா உட்கார்த்தி வைக்க முடியாது என்றும் ரஷிய அரசு எச்சரித்தவுடன் மத்திய மாநில அரசுகள் வேகமாகச் செயல்பட ஆரம்பித்தன.
பிரதம மந்திரி அங்கு விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என்று அறிவித்தார். முதலமைச்சர் உலையின் பாதுகாப்பு அம்சங்கள் திருப்தியாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய நிபுணர்கள் கமிட்டியை அமைத்தார். கமிட்டி உலையின் பாதுகாப்பு அம்சங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியது. அரசுத் தரப்பிலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்கள் மக்களது அச்சத்தைப் போக்க முயற்சி செய்தன. மாநில அரசு ஐநூறு கோடி ரூபாய்க்கு கூடாங்குள மக்களுக்கு நலத்திட்டங்களை அறிவித்தது.
இப்போது போராட்டத்தின் உத்வேகம் குறைய ஆரம்பித்தது. ஆனாலும் முழுவதும் நின்றபாடில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வேறு தொடரப்பட்டிருந்தது.
சங்கருக்கும் கோமதிக்கும் அரசாங்கமும் நிபுணர்களும் சொல்வதையும் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது. இருந்தாலும் போராட்டக் குழு நிர்வாகிகளின் வற்புறுத்தலின் பொருட்டு அவர்கள் இருவரும் அன்றைய தினம் எதிர்ப்புப் போராட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தனர். அவர்களது இரண்டு வயது மகன் சரவணன் வீட்டில் தாத்தா பாட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தான்.
கோமதி வீட்டு வேலைகளைக் கவனிக்க சமையலறைக்கு விரைந்தாள்.
“மீட்டிங்ல என்னப்பா சொன்னாங்க?” கவலையுடனும் குழப்பத்துடனும் மகனைக் கேட்டார் தர்மலிங்கம்.
“அதான்ப்பா, ஜப்பான் சுனாமிக்குப் பிறகு மத்த நாட்டுலல்லாம் அணுமின் உலைங்கள மூடிட்டு வரபோது இங்க மட்டும் எதுக்குன்னு கேக்குறாங்க”
“ஏம்ப்பா ஜப்பான்லயே திரும்பவும் அணுமின்சாரத்த பாதுகாப்பான மொறயில கொண்டுவரலாமான்னு யோசிச்சிட்டிருக்காங்களாமே! அணுமின்சாரந்தான் சுத்துச்சூழல மாசுபடுத்தாதுனு சொல்றாங்களே!”
“அணுமின் உலையக் குளிர வைக்கத் தண்ணி வசதி கூடப் பத்தாதாம்.” சங்கர் தொடர்ந்தான்.
“எனக்கு நெசமாலுமே புரியல்ல! பெரிய பெரிய விஞ்ஞானிங்கள தமிழக அரசு அனுப்பி வச்சது. அவங்க பாத்துட்டு பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் நல்லாருக்கு, ஒண்ணும் ஆபத்து ஏற்படாதுன்னுதானே சொல்லிட்டுப் போனாங்க?!”
ஒரு வருட காலமாகக் கருத்துக்களையும் மாற்றுக் கருத்துக்களையும் கேட்டுக்கேட்டு தர்மலிங்கத்துக்கு அலுத்துப் போயிருந்தது.
“கேஸ் நெடி வர மாதிரி இல்ல?” திடீரெனக் கேட்டார் ராணி.
“ஆமாம்மா” விழுந்தடித்துக் கொண்டு சமையலறைக்கு ஓடினான் சங்கர்.
ராணியும் தர்மலிங்கமும் பதறியபடி கூடவே சென்றார்கள். கோமதி பின்பக்க வராண்டாவில் துணி காய வைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை சரவணன் கால் விரல் நுனிகளில் நின்று எம்பிக்கொண்டு சமையல் மேடையை எட்டி கேஸ் அடுப்பின் பர்னர் நாபுகளை மும்முரமாகத் திறந்தும் மூடியும் செய்து கொண்டிருந்தான். பாய்ந்து சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்ட சங்கர் வேகமாக பர்னர் நாபுகளை மூடினான். குழந்தையை அதட்டினான். சமையலறை மற்றும் ஹாலின் ஜன்னல் கதவுகளை நன்கு திறந்துவிட்டான். “கொஞ்ச நேரத்துக்கு எந்த ஸ்விச்சையும் ஆனோ ஆஃபோ செய்யாதீங்க” என்றான்.
பதட்டமான குரல்கள் கேட்டு கோமதி ஹாலுக்கு ஓடி வந்தாள். நடந்ததைக் கேட்டு விதிர்விதிர்த்து நின்றாள்.
“கவனம் இல்லாட்டி பெரிய ஆபத்துதான். அதுக்காக காஸ் அடுப்ப வாணான்னு சொல்ல முடியுமா” என்றார் ராணி.
“இனிமே நீங்க கிச்சனை விட்டு வெளிய வரதுன்னா சிலிண்டர் வால்வையும் மூடிட்டு வாங்க” என்று மனைவியையும் மருமகளையும் எச்சரித்தார் தர்மலிங்கம். இருவரும் தலையசைத்தனர்.
“சங்கர், நீ மீட்டிங் போயிருந்தப்ப சென்னைலேர்ந்து ஃபோன் வந்துச்சு” என்றார் தர்மலிங்கம்.
“அக்கா என்ன சொன்னாங்கப்பா?” என்றான் சங்கர். அவனது அக்கா கலா அவனை விடப் பத்து வயது மூத்தவள். கணவனுக்கு நல்ல உத்தியோகம். அவர்களது மகன் ரமேஷ் இந்த வருடம் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான்.
“ரமேஷ்தான் பேசினான். அவனுக்கு மொபெட் வாங்கித் தர மாட்டேங்குறாங்குளாம் உங்க அக்காவும் மாமனும்.” தர்மலிங்கம் சிரித்தார்.
“ஏன்?”
“நிறைய டூவீலர் விபத்துங்க தினமும் நடக்குதாம்” கவலையுடன் சொன்னார் தர்மலிங்கம்.
“சரிதான். நடந்துபோனாலும் சில சமயம் ஆபத்து வரத்தானே செய்யுது. அவனுக்கு ஃப்ரண்ட்ஸ் மாதிரி வண்டி ஓட்ட ஆசை இருக்காதா?” என்றான் சங்கர்.
“அவனுக்கு பத்திரமா ஓட்ட கத்துக் குடுத்து லைசென்ஸ் வாங்கிக் குடுக்கணும். அதுக்கு மேல கடவுள் கிட்ட ஒப்படச்சு செய்யணுந்தான்.” என்றார் ராணி.
தர்மலிங்கம் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். தன் மனைவி சொன்ன கருத்து வீட்டுக்கு மட்டுமில்லை, நாட்டுக்கும் பொருந்தும் என நினைத்துக் கொண்டார்.
கஜேந்திர மோட்சம்
(2012ஆம் ஆண்டில் எழுதி 2020ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட சிறுகதை)
முதலை வாயிலிருந்து காலை எடுக்க முடியாமல் “ஆதிமூலமே!” என்று கதறிய யானையை மஹாவிஷ்ணு கருடன் மீது பறந்தோடி வந்து காப்பாற்றினார் என்று தொலைக்காட்சியில் பாகவதர் உருக்கமாக வருணித்துக் கொண்டிருந்தார். கமலா மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நாமெல்லாமும் ஸம்ஸாரம் என்னும் முதலை வாயில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம்மைக் காப்பாற்றவும் கடவுள் வருகிறார். ஆனால் அவர் அப்போது சங்கு சக்கரம் தாங்கி கருடன் மீது வருவதில்லை. மனித உருவங்களில்தான் வந்து உதவி செய்கிறார்……” என்றார் பாகவதர்.
“உண்மைதான். கடவுள் ஓடி ஓடித்தான் வருகிறார். ஆதிமூலமே என்று கதற மறந்தாலும் ஓடி வந்து விடுகிறார்“ என்று நினைத்த கமலாவின் கண்கள் ஈரமாயின.
அவளுடைய மனக்கண் முன் செய்தித் தாள்களில் படித்து மனதில் ஆழமாகப் பதிந்த சில காட்சிகள் விரிந்தன.
சில வருடங்களுக்கு முன் சென்னை நீலாங்கரையில் சாலை ஓரக் கழிவு நீர்ச் சாக்கடைக்குள் ஒன்பது குழந்தைகளுடனும் ஒரு மூதாட்டியுடனும் ஒரு ஷேர் ஆட்டோ விழுந்து விட சாலையில் சென்று கொண்டிருந்த சிலர் சிறிதும் தாமதியாமல் சாக்கடைக்குள் குதித்து உள்ளே விழுந்தவர்களைப் பத்திரமாக வெளிக் கொணர்ந்தனர்.
சென்னை அண்ணா மேம்பாலத்தில் பஸ் ஒன்று தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு உருண்டு விழுந்தபோது அருகிலிருந்த மக்கள் ஓடி வந்து உதவி செய்தனர்.
டிஸம்பர் 2011ல் கொல்கத்தாவில் ஒரு மருத்துவ மனையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்ட போது அருகில் இருக்கும் குடிசைகளிலிருந்து இளைஞர்கள் ஓடி வந்து சுவரேறிக் குதித்து மருத்துவ மனைக்குள் சென்று பல உயிர்களைக் காப்பாற்றினார்கள்.
எல்லாவற்றுக்கும் சிகரமாகச் சமீபத்திய கொரோனா காலத்தில் ஆகஸ்ட் 7, 2020 அன்று துபாயிலிருந்து பயணிகளை அழைத்து வந்த வந்தே பாரத் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் இறங்கிய போது மூன்றாக உடைந்துவிட அப்போது அதிக உயிர்ச் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்குக் காரணம் விமானத்தில் சிக்கியிருந்தவர்களைக் காப்பாற்ற அருகிலிருந்த கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதி உள்ளூர்வாசிகள் மழையையும் கொரோனா தொற்று அபாயத்தையும் பொருட்படுத்தாமல் உயிர்களைக் காப்பாற்றுவதையே நோக்கமாகக் கொண்டு ஓடிவந்து விமான நிலையப் பணியாளர்களுடன் இணைந்து மின்னல் வேகத்தில் உதவியதாலல்லவா!
பிறருக்குப் பெருந்துன்பங்கள் நேரும் போது மனிதர்கள் தங்களை மறந்து உதவி செய்யும் தருணங்களில் கடவுளின் அம்சங்களாக அல்லவா இருக்கிறார்கள்!
கடவுள் எங்கும் எல்லா உயிர்களிலும் நிறைந்திருந்து கஜேந்திர மோட்சங்களை நடத்திக் கொண்டேதான் இருக்கிறார் என்று நினைத்தபடி எழுந்தாள் கமலா.