நினைவுத் துணுக்குகள்

லலிதா சீதாராமன்

(2013ஆம் ஆண்டில் எழுதப்பட்டது)

‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தில் திரு கமல்ஹாஸனிடமும் அவரது நண்பர்களிடமும் வசமாக மாட்டிக் கொண்ட திரு கிரேஸி மோஹன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ‘ஷட் அப்!’ என்று சொல்ல ‘என்ன கெட்ட வார்த்தையெல்லாம் சொல்கிறாய்?’ என்று அவர்கள் அவர் மீது பாய்வார்கள். ‘ஷட் அப் என்பது கெட்ட வார்த்தை இல்லையே’ என்று கிரேஸி மோஹன் பயந்தும் வியந்தும் கூறியவுடன் கமலும் அவரது நண்பர்களும் ‘ஆமால்ல, அது கெட்ட வார்த்தை இல்லல்ல…’ என்று  ஒருவர் முகத்தை ஒருவர் குழப்பத்துடனும் சந்தேகத்துடனும் பார்த்துக் கொண்டு சமாளித்துக் கொள்வார்கள்.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் திரு ஆஷிஸ் நந்தி ‘கரப்ஷன்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் அதிகார முறைகேடு (அதாவது, அதிகாரங்களைத் தவறான முறையில் பயன்படுத்துதல் அல்லது அதிகார துஷ்பிரயோகம்)  பற்றிப் பேசியதும் அதற்கு எழுந்த எதிர்ப்புகளும் கண்டனங்களும்  மேற்கூறிய திரைக்காட்சியை நினைவூட்டின. “அதிகார  முறைகேடுகளை மேல் வர்க்கத்தினர் செய்யும் போது நாசுக்காகச் செய்துவிட்டு தாங்கள் பெற்றவற்றைத் தங்களது திறமைக்கும் தகுதிக்கும் கிடைத்தவை போல் காட்டி விடுகிறார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த நளினம் இன்னும் வரவில்லை. அவர்கள் வெளிப்படையாகச் செய்துவிட்டு மாட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இப்போது அவர்களும் இந்தக் கலையில் தேறி வருகிறார்கள். எனக்கு அதனாலேயே இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்று பொருள்பட வஞ்சப்புகழ்ச்சி அணி நயத்துடன் இந்தியாவின் அதிகார முறைகேடுகளை  எள்ளி நகையாடி அவர் உரையாற்றினார். அதை ஊடகங்கள்  தங்களுக்கே உரிய பரபரப்பான முறையில் வெளியிட, தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அவர்  தரக்குறைவாகப் பேசியதாக பலத்த கண்டனங்களும்  ஆர்ப்பாட்டங்களும் எழுந்து வழக்குப் பதிவுகளும் செய்யப்பட்டன. சில அறிவு ஜீவிகளும்  இலக்கிய ஆர்வலர்களும் ஆஷிஸ் நந்தியின் கருத்துக்கள் பற்றியும் அவற்றை அவர் வெளியிடும் விதம் பற்றியும்  இதற்கு முன்பு அவர் கூறியிருந்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் அவற்றிற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளையும் விலாவாரியாக எழுதி   ‘தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி தவறாகப் பேசுபவர் அல்ல அவர்’  என்று பரிந்து வந்தார்கள். பரபரப்பாக செய்தி வெளியிட்ட செய்தித்தாள்களும் ஆர அமரத் தலையங்கம் எழுதி ஆஷிஸ் நந்திக்கு ஆதரவு தந்தன. ‘நான் என் வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே போராடியிருக்கிறேன். இப்போது அவர்களுக்காகச் சிறைக்கு வேண்டுமானாலும் செல்லத் தயார்’ என்று தன்னிலை விளக்கம் அளித்தார் ஆஷிஸ் நந்தி.

‘கரப்ஷன்’ செய்யப் படும் விதம் பற்றி ஆஷிஸ் நந்தி பேசியதைப் படித்த போது எழுபதுகளின் பிற்பகுதியில் அமைக்கப் பட்ட ஸர்க்காரியா கமிஷன் உபயோகப்படுத்திய  ‘ஸயன்டிஃபிக் கரப்ஷன்’  (விஞ்ஞான முறையில் செய்யப்படும் அதிகார முறைகேடு) என்ற சொற்றொடரும் அதைப் பற்றி தொலைக்காட்சியில் பேசும் போது ‘கரப்ஷன் ஒரு கலையாகவே செய்யப்பட்டது’ என்று திரு. சோ வருணித்ததும் ஞாபகத்துக்கு வந்தன. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற சிலப்பதிகார வரியும் நினைவில் வந்து சென்றது.

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ஆஷிஸ் நந்தி பேசியது சர்ச்சைக்குள்ளானது போலவே .சில மாதங்களுக்கு முன்பு நோபல் பரிசாளர் திரு வி.எஸ். நைபாலுக்கு (V.S.Naipaul) ‘வாழ்நாள் சாதனை விருது’ கொடுக்கப் பட்ட மும்பை இலக்கிய விழாவில்  திரு கிரிஷ் கர்னாட் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது.  ‘முஸ்லிம் படையெடுப்பாளர்கள் மீது குற்றம் சாட்டி எழுதிய நைபால் இந்திய இசைக்கு அவர்கள் செய்த பங்களிப்பு பற்றி ஏன் எழுதவில்லை?’   என்று அந்த விழாவில் அவர் வினா எழுப்பினார். மேலும் நைபால் ஒரு இந்தியர் அல்ல என்றும் அவர் தன்னை  ஒரு போதும் இந்தியராகச் சொல்லிக் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார். நைபாலையும் அவரது எழுத்துக்களையும் பற்றிச் சரமாரியாகக் குறை கூறினார். அவர் பேசியதற்கு எதிராகவும் ஆதரவாகவும் ஊடகங்களில் எழுதப் பட்ட கடிதங்களும் கட்டுரைகளும் ‘எதைக் கூறினாலும் அதை ஆதரிக்கப் பத்து பேர்களும் எதிர்க்கப் பத்து பேர்களும் இருக்கிறார்கள்’ என்ற எழுத்தாளர் சுஜாதாவின் கருத்தை ஞாபகப் படுத்தின.

2013-14க்கான நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் திரு. ப.சிதம்பரம் பெண்களால் மட்டும் நடத்தப்படும் பொதுத் துறை வங்கியை உருவாக்கப் போவதாகக் கூறினார். பெண் நீதி மன்றங்கள் வேண்டும் என்று சில பேர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ‘ஆண்-பெண் பேத உணர்வு மறைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டிய இந்த நாளில் பெண்களால் மட்டும் நடத்தப்படும் வங்கி என்பது காலத்தில் பின்னோக்கி செல்வது போலிருக்கிறது‘ என்ற அறிவு பூர்வமான கருத்துக்களும் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.  பிரச்சினைகளையும் தீர்வுகளையும் ஏன் ஆண் என்றும் பெண் என்றும் தனித்தனியாக அணுக வேண்டும்?  புதுதில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிர் நீத்த மருத்துவ மாணவிக்காக மக்கள் வருத்தம் தெரிவித்துக் கூடிய கூட்டங்களில் ஆண்களும் சம அளவில் இருந்தார்கள். அந்த முகங்களில் தெரிந்த வேதனைகளில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லையே?

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து நார்வே நாட்டிற்கு வேலை பார்க்கச் சென்ற ஒரு இளைஞருக்கும் அவரது மனைவிக்கும் அங்கு ஏற்பட்ட அனுபவங்கள் மிகக் கொடியவை. அது வரை நாம் கேள்விப் பட்டிராத ‘அதிசயம், ஆனால் உண்மை’ என்கிற விதமாக இருந்தது அவர்களது பிரச்சினை. தங்கள் குழந்தைகளிடம் அப்பெற்றோர்  போதுமான கவனம் செலுத்தவில்லை என்று  தாங்கள் கணித்திருப்பதாகக் கூறிய நார்வே நாட்டின் அரசு அமைப்புகள்  அக் குழந்தைகளைக் குழந்தைகள் நல மையத்தில் வைத்துப் பராமரித்து வந்தன. பெற்றோர்கள் மிக மிகக் குறைந்த நேரமே குழந்தைகளுடன் இருக்க அனுமதிக்கப்பட்டார்கள். இத்தனைக்கும் அவர்களது மூன்று வயது மகனுக்கு உள ரீதியாகக் கூடுதல் கவனம் தேவைப்பட்டது. அவர்களது மகள் ஒரு வயது கூட நிரம்பாத பச்சிளம் குழந்தை. தங்கள் குழந்தைகளைத் தங்களிடம் கொடுக்கக் கோரி அப் பெற்றோர் அந்நாட்டு அரசாங்கத்துடன் பல மாதங்களாகப் போராடிக் கொண்டிருந்தார்கள். என்னே உலக நீதி! மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் சேர்ந்த முன்னணித் தலைவர் திருமதி பிருந்தா கரத் அக் குழந்தைகளின்  தாத்தா பாட்டியை அப்போதைய குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீலிடம் அழைத்துச் சென்று உதவி கேட்டார். உடனே அப்போதைய இந்திய வெளி உறவுத்துறை அமைச்சர் திரு. எஸ்.எம்.கிருஷ்ணா நார்வே நாட்டுடன் தொடர்பு கொண்டு பிரச்சினையைத் தீர்த்து வைக்க முயற்சித்தார். இருந்தாலும்  நார்வே நாடு அவர்களது சட்டப்படி செய்ய வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்த பிறகுதான் குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்ப முடியும் என்றது; ‘நன்கு பார்த்துக் கொள்வார் என்று எங்களுக்குத் திருப்தி ஏற்படுத்தும் நபரிடம்தான் குழந்தைகளை ஒப்படைப்போம்’  என்றது. அக் குழந்தைகளின் சித்தப்பா தன் அண்ணனுக்கு உதவி செய்ய முன்வந்தார். பல் மருத்துவரான அவர் நார்வே சென்று அந்த அரசு அமைப்புகள் கொடுத்த பயிற்சியை எடுத்துக் கொண்டு அவர்களது திருப்திக்குப் பாத்திரமானார். இதற்கிடையில் நார்வே அரசுடன் போராடும் வலியிலும் ஏமாற்றங்களிலும் ஆயாசம் அடைந்திருந்த கணவனும் மனைவியும் தங்களுக்குள்ளும் மோதிக் கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். ‘வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்தது போல’ குழந்தைகளைத் திரும்பப் பெறும் நாள் கூடி வரும் போது அவர்களுக்குள்ளான மோதல் உலகுக்கு வெட்ட வெளிச்சமாகி  கணவர் ‘மனைவிக்குப் போதுமான மனப் பக்குவம் இல்லை’ என்பது மாதிரியான குற்றச்சாட்டைக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு வழியாகக் குழந்தைகள் சித்தப்பாவிடம் ஒப்படைக்கப்பட்ட போது இரு நாடுகள் அளவில் பேசப்பட்ட பிரச்சினை இரு சம்பந்தி வீடுகளுக்கிடையான பிரச்சினை ஆகியது. இந்தியா அழைத்து வந்த குழந்தைகளைச் சித்தப்பா நன்கு கவனித்துக் கொண்டாலும் இரு குடும்பங்களுக்கிடையே  இருந்த தகராறால் தாய்க்குத் தன் குழந்தைகளைப் பார்க்கவும் அவர்களுடனிருக்கவும் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. காவல் துறையிடம் புகார் மற்றும் நீதி மன்றத்தில் வழக்கு என்பது அவர்களது அன்றாட வாழ்க்கையின் அம்சங்களாகி விட்டன. நார்வேயிலேயே இருந்த குழந்தைகளின் தந்தை தன் மீது மனைவி வீட்டினர் வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் தான் இந்தியா வந்தால் கைது செய்யப் படும் ஆபத்து இருப்பதால் தான் இந்தியா வர இயலவில்லை என்றும் கூறினார்.  இதற்கிடையில் தாய் தான் போதுமான அளவு மன நலத்துடன் இருப்பதாக உரிய அமைப்பின் பரிசோதனைகளுக்கு உட்பட்டு  சான்றிதழ் பெற்று வந்தார். குழந்தைகளின் பாதுகாப்பு வழக்கை இடைக்கால தீர்ப்புக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி திரு தீபாங்கர் தத்தா “குழந்தைகள் ஒரு நாள் தாயிடம் இருக்கட்டும்”  என்று உத்தரவு போட்டார். மறுநாள் குழந்தைகளின் தாயையும் சித்தப்பாவையும் தனித்தனியாக தனது அறையில் விசாரித்தார்.  “இந்த ஒரு நாள் இரவும் குழந்தைகள் தாயிடமே இருக்கட்டும். இடைக்காலத் தீர்ப்பை நாளைக்குச் சொல்கிறேன். எனக்கு இன்னும் இந்த வழக்கில் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது” என்றார்.  அந்தத் தாய்க்குச் சாதகமாக மறுநாள் தீர்ப்பு வர வேண்டுமே என்று நிறையப் பேர் அன்றைய இரவில் கடவுளிடம் பிரார்த்தித்திருப்பார்கள். மறுநாள் “குழந்தைகள் தாயிடம் இருக்கட்டும்“ என்ற இடைக்காலத் தீர்ப்பை நீதிபதி வழங்கினார். “நான் நன்றாகத்தானே பார்த்துக் கொண்டேன்” என்று புலம்பினார் சித்தப்பா. அவர் எடுத்துக் கொண்ட முயற்சி மகத்தானதுதான் என்றாலும் குழந்தைகள் தாயிடம் இருப்பதுதானே இயற்கை, மற்றும் அவரது தனிப்பட்ட எதிர்காலத்துக்கும் அதுதானே நல்லது!  மேற்கண்ட பிரச்சினையை ஒட்டி மனதில் நிறையக் கேள்விகள் எழுகின்றன. இது பொதுவான பிரச்சினையா அல்லது பெண்களுக்கான பிரச்சினையா?  கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர்  வீசிக்கொண்ட குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்கிறதா இல்லையா? பொய் வழக்குகள் போடுவதும் பொய் சாட்சி சொல்வதும் அறநெறிப்படியும் தவறு அல்லவா?  வரதட்சிணைத் தடுப்புச் சட்டம் போன்று பெண்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தை வஞ்சம் தீர்க்கும் ஆயுதமாகச் சில பெண்கள் தவறாக  உபயோகப் படுத்தினால் ‘புலி வருகிறது’ கதை போல ஆகி அச்சட்டம் உண்மையான ஆபத்துக்களின் போது பயனற்றுப் போய்விடாதா? பிரச்சினைகளின் வெப்பம் சற்று அடங்கியிருக்கும் தருணத்தில், பொய் வழக்குகள் போடப்பட்டிருந்தால் அவை திரும்பப் பெறப் பட்டு,  தாய், தந்தை இருவரும் சமரசம் செய்து கொண்டு அக் குழந்தைகளுடன் இந்தியாவில் தங்கள்  வாழ்க்கையைத் தொடர்ந்தால் எவ்வளவு நன்மை பயக்கும்!  

அமெரிக்காவில் கனெக்டிகட் மாநிலத்தில் டிசம்பர் 2012ல் ஒரு பள்ளிக்கூடத்தில் புகுந்து இருபது வயது வாலிபர் ஒருவர்  நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் இருபது பள்ளிக் குழந்தைகள் உட்பட இருபத்தாறு பேர்கள் பலியான சம்பவம் எல்லோரையும் அதிர வைத்தது.   அந்த வாலிபர் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் தன் தாயையும் சுட்டுவிட்டு வந்திருந்தார். பள்ளிச் சம்பவத்தின் இறுதியில் தன்னையும் சுட்டுக் கொண்டார். இருபத்தெட்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மூன்று துப்பாக்கிகளை வீட்டில் வாங்கி வைத்திருந்தவர் அந்த வாலிபரின் தாய்! அமெரிக்காவில் ஒவ்வொரு துப்பாக்கிச் சூடு நடைபெறும் போதும் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையைக் கட்டுப்படுத்த  வேண்டும் என்ற வாதம் வலுப்படுவதும்  துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம்  அந்த வாதத்தைப் பலமாக எதிர்ப்பதும் வழக்கம், அத்தகைய விவாதம் தொலைக்காட்சியில் நடந்து  கொண்டிருந்தது. துப்பாக்கி உரிமையை ஆதரிப்பவர்கள்  ‘போதிய துப்பாக்கிகள் இல்லாததால்தான் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. பள்ளிகளுக்குத் துப்பாக்கிகளைக் கொடுத்து விடலாம்’ என்று விநோதமான ஆலோசனையைக் கூறினார்கள். அப்போது அவ் விவாதத்தில்  கலந்து கொண்ட ஒருவர், “நான் ஆர்மியில் இருந்திருக்கிறேன். துப்பாக்கிகளைக் கையாண்டிருக்கிறேன். போதும்! பெற்றோர் துப்பாக்கிகளைக் கொஞ்சம் கீழே வைத்து விட்டு தத்தம்  வீட்டுக் குழந்தைகளைக் கவனிக்கட்டும்.  ஒரு வேளை அந்த இருபது வயதுக் குழந்தைக்கு அன்பும் அரவணைப்பும் கிடைத்திருந்தால் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழாமல் கூட இருந்திருக்கலாம்”  என்று பொருள்படக் கூறிய கருத்து  பல பேரின் இதயத்தைத் தொட்டிருக்கும்.

Published by Lalitha Sitaraman

Author of the site is a retired banker, an avid reader, a keen learner and an admired writer. Her subjects of interests include Mathematics, Computer Applications, Languages and much more.

2 thoughts on “நினைவுத் துணுக்குகள்

Leave a comment