மாற்றி யோசித்து ஒன்றாக முன்னேறுவோம்!

லலிதா சீதாராமன்

( 27.06.2019 அன்று எழுதப்பட்டது )

சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலுக்கு முன்,  தனியார் தொலைக்காட்சி ஒன்றில்,  சில தோழமைக் கட்சிகளின் கூட்டம் ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தது. அந் நிகழ்ச்சியின் முடிவில் சில பார்வையாளர்கள் திடீரென முன்னறிவிப்பின்றியும் காரணமேதுமன்றியும் குட்டப்பட்டது போல் உணர்ந்திருப்பார்கள்.  ஒரு அரசியல் தலைவர்  வீரவாள் என்ற சொல்லை  உபயோகப்படுத்திய மறு கணம் மற்றோர் தலைவர்  வீரவாள் என்று சொல்லி அவாளைஅழைத்துக் கொண்டு வந்துவிடாதீர்கள் என்றவுடன் மேடையில் ஆமோதிப்பாகச் சிரிப்பலைகள் கிளம்பின. பொதுப்பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு (10% reservation for economically weaker section in  general category) செய்யும் மத்திய அரசின் சமீபத்திய திட்டத்திற்கான   எதிர்ப்பு  ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் தலையில்  குட்டாக விழுந்தது.  காலப்போக்கில் நிகழ்ந்துவிட்ட மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் பொதுவாக அனைவரும்  முன்னேறுவதற்கான வழிகளைத் தேட வேண்டிய அவசியத்தையும்  சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

 ‘மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அனைவரும் அறிந்ததே. உதாரணத்திற்கு கம்பெனி சட்டம், 1956 என்பது பல வருடங்கள் அமலில் இருந்தது.  பின்பு 2014ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி முதல் கம்பெனி சட்டம், 2013 அமலுக்கு வந்தது.  புதிய சட்டத்தின் அனைத்து அம்சங்களும் படிப்படியாக நடைமுறைக்கு வந்த பின்னரும்   பழைய சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் காலப்போக்கில்  தீர்ந்தொழிந்த பின்னரும்  முந்தைய சட்டத்தின்  ஒவ்வாத அம்சங்கள் தொடர்ந்து சாடப் படுவதில்லை.

இந்தியா என்றோ அல்லது இந்துமதம் என்றோ குறிப்பிட்டுச் சொல்லுவதற்கு ஏதுமன்றி  உலகின் அனைத்து நாடுகளும் மற்றும் அனைத்து மதங்களும் பழங்காலங்களில் ஏதோ சில விதங்களில் மனிதர்களைப் பாகுபடுத்தியிருக்கிறார்கள்; பிறகு காலப் போக்கில் புரட்சிகள் வெடித்து ஏற்றத் தாழ்வுகளின் சமனங்கள் நிகழ்ந்து வருகின்றன என்பது உலகம் அனைத்துக்கும் பொருந்திய பரவலான சரித்திர உண்மை.

ஒரு சட்டம் என்பது எழுத்து பூர்வமாக இருப்பதால்  அதன் மாற்றத்தை நாம் எளிதில் உணர்கிறோம்.  ஆனால் மதக் கொள்கைகளில் மாற்றம்  என்பது எங்கும் எழுதப்படாததால் மாற்றத்தை நாம் இதர சான்றுகளால்தான் உணரவேண்டும்.  இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடிஎன்ற உரைகல்லில் வைத்துப் பார்க்கும் போது சாதிப் பாகுபாட்டைச் சாடிய புலவர்களையும் அறிஞர்களையும் அவர்களது இலக்கியங்களையும் மக்கள்  கொண்டாடுகிறார்கள்  என்கிற பொதுவான போக்கு மதக் கொள்கைகள் மாறிவிட்டன  என்பதற்கு இரட்டைச் சான்றளிக்கிறது.  ஆனால் இது பாதி டம்ளர் நிரம்பியதைப் போல்தான் என்று கூறலாம்.  தமிழகத்தில் குறிப்பிட்ட வகை  ப்ளாஸ்டிக் பைகள் இந்த ஆண்டின் முதல் தேதியிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தும் ஆறுமாத காலமாகியும்  அவை தாராளமாகப் புழங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் எப்படி குறிப்பாகவோ    அல்லது பொதுவாகவோ எந்தப் பிரிவினரையும் சுட்டிக் காட்டி குற்றம் சாட்ட முடியாதோ  அது போல மதம் சார்ந்த கொள்கைகளிலும் முழுமையான பார்வைகளும் அணுகுமுறைகளுமே பயனளிக்கும். 

தற்காலத்தில் தமிழர்கள் அனைவருமே சாதிப் பாகுபாடின்றி என்ன நேர்ந்து விட்டது தமிழர்களுக்கு?’ என்று கவலைப்பட வேண்டிய காலகட்டத்திலிருக்கிறார்கள்.    இதை வெட்ட வெளிச்சமாகக் காட்டியது இந்த வருடம் (2019) மே மாதம் 30ஆம் தேதி அன்று பதவி ஏற்றுக்கொண்ட  17வது லோக்சபாவின்  மந்திரிசபைப் பட்டியல்! அறுபது வருடங்களுக்கும் மேலான காலத்தில்  முதல் முறையாக தமிழ்நாட்டு உறுப்பினர்கள்  இடம் பெறாமல் ஒரு மத்திய மந்திரிசபை  பதவி ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை செய்தித் தாள் சுட்டிக் காட்டியது.  பிரதம மந்திரியைத் தவிர 57 மந்திரிகள் அடங்கிய அந்தப் பட்டியலில்  நிர்மலா சீதாராமன்மற்றும் சுப்பிரமணியம்  ஜய்சங்கர் என்ற இரண்டு பெயர்களைத் தவிர பெரும்பாலான மற்ற பெயர்களை எளிதில் படிக்கவோ அல்லது உச்சரிக்கவோ முடியவில்லை! அந்த இருவரையும் தமிழர்கள் என ஏற்றுக்கொள்ள முடியாது என்பதாகச் சிலர் கூறி வருவது வேறு விஷயம்!!

ஒரு காலத்தில் ஐஐடி நுழைவு, ஐஏஎஸ்  இறுதி முதலிய அகில இந்தியத் தேர்வுகளின் முடிவுகளில் முதலிடங்களிலும் அதிக எண்ணிக்கைகளிலும் காணப்பட்ட தமிழ்நாட்டுப் பெயர்களை தற்போது குறைவாகவே பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, 2019ல், மருத்துவப் படிப்பிற்கான   நீட்’ (NEET) நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் முதலாவதாக வந்த மாணவர்  (குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் மாணவிஅகில இந்திய அளவில் 57வது ரேங்கிலும் ஐஐடிக்களில் பொறியியல் படிப்பிற்கான உயர்நிலைக் கூட்டு நுழைவுத்தேர்வில்  [JEE(advanced)]  தமிழ்நாட்டில் முதலாவதாக வந்த மாணவர் அகில இந்திய அளவில் 33வது ரேங்கிலும் இடம் பெற்றிருக்கிறார்கள்.  சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக நிலவரம் இப்படித்தான் இருக்கிறது.   தமிழ்நாட்டின் கிராமப்புறத்திலிருந்து வருபவர்களும் மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கியவர்களும் நுழைவுத் தேர்வுகளைச்  சிறப்புறச் செய்ய இயலாததே  இதற்கான காரணம் என்கிறார்கள். இது ஒரு தவளைக் கதையை நினைவூட்டுகிறது. ஆழமான கிணற்றின் அடியிலிருந்த சில தவளைகளுக்கு மேலே வருவதற்கான ஒரு போட்டி வைக்கப்பட்டதாம்.     அவற்றால் மேலே வர முடியாது ’     என்று எழும்பிய கூக்குரல்களைக் கேட்டுப் பல தவளைகள் முயற்சிகளைக் கைவிட்டு  விட  ஒரு தவளை  மட்டும் காது கேட்காததால்  அநாயாசமாகத் தத்தித் தத்தி மேலே வந்ததாம்.    நுழைவுத் தேர்வுகளைத் தமிழ்   நாட்டு மாணவர்கள் சிறப்புறச் செய்யமுடியாது என்ற வாதத்தைக்  கிராமம் அல்லது நகரம் என்ற வேறுபாடின்றியும் சமூகப் பாகுபாடின்றியும் தமிழ் நாட்டின் அனைத்து மக்களும்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          செவிமடுக்கிறார்கள்  என்பதையே தற்போதைய நிலவரம் காட்டுகிறது!   குன்றின் மேலே செல்வதை விட இறங்கும் பாதை எளிது அல்லவா?  நுழைவுத் தேர்வுகளின்  முடிவுகள் மட்டுமே கவலையளிக்கின்றன எனச் சொல்லிவிட முடியாது.  தமிழ் மொழியைப் பிழையின்றி உச்சரித்துப் பேசுவதும் எழுதுவதும் கூட வேகமாகக் குறைந்துவருகிறது. அநேகமாக ல் என்ற உச்சரிப்பை ஒழித்து  அதை ள் கூட ஐக்கியமாக்கி விட்டார்கள் என்பது பெரும்பாலான தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் பொங்கல் என்பதைப் பொங்கள் என்று உச்சரிப்பதிலிருந்து அறிகிறோம். ஒரு விதத்தில்  இப்படி எல்லோரும் சமதளத்திற்கு (level playing field) வந்துவிட்டது நல்லதுதான்! இங்கிருந்து அனைவரும் முன்னேறுவதற்கான வழியைக் காண்போம்.

நீட் தேர்வைப் பற்றிப் பேசும் போது திருவள்ளுவர் மருத்துவத்தைப் பற்றி என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

 வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்னும் குறளில் நோயின் தன்மையை ஆராய்ந்து அதன் காரணத்தை ஆராய்ந்து அதைத் தணிக்கும் தன்மையை ஆராய்ந்து உடலுக்குப் பொருந்தும்படியாக மருத்துவர் செயல்பட வேண்டுமெனக் கூறுகிறார்.  ஆராய்ந்து என்ற பொருளைக் கொடுக்கும் நாடி என்ற சொல் இக் குறளில் மூன்று முறை வருகிறது.  இதே போல் 

உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்

கற்றான் கருதி செயல்

என்ற  குறளில்   மருத்துவர் நோயாளியின் வயதையும் நோயின் அளவையும் காலத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும் எனக் கூறும் போது  கருதி என்ற சொல்லில் அழுத்தம் தருகிறார். அதாவது மருத்துவப் பணியில் சிந்தித்துச் செயல்பட வேண்டியது அவசியம் என்கிறார் வள்ளுவர். இந்தச் சிந்தனைத் திறனைப் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களின் மீது செலுத்திப்   பாடங்களை நாடியும் கருதியும் மற்றும் ஆராய்ந்தும் படித்தால் அதுவே நீட் தேர்வை வசப்படுத்திக்கொள்வதற்கான வழியல்லவா!  முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்காவிட்டால் கூட ஒரு வருடம் முழுவதும் பயிற்சி செய்து அடுத்த வருடம் எழுதுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. 

            மேலும் தொழில்முறைப் படிப்புக்களில் அவ்வளவு சுலபமாக வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்பது வணிகத்துறை சார்ந்த சிஏ (CA), சிஎம்ஏ (CMA), சிஎஸ்  (CS) போன்ற படிப்புகளின் பரீட்சைகளில் பத்து சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் புரியும்.  அப் படிப்புகளின் பரந்து விரிந்த மற்றும் அதி வேகமாக மாறுதல் அடையும் தன்மை வாய்ந்த பாடத்திட்டங்களை  ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நவில்தொறும் நூல்நயம் போல என்ற குறளின் சொற்றொடர்க்கேற்பப் புதுப்புது நுணுக்கங்கள் புலப்படும். சிலமுறை, நல்ல வேளை, இந்த நுணுக்கம்  புரியாமல் நான் பாஸ் செய்யவில்லை என்று மாணவர்களுக்கு ஆறுதலாகக் கூட இருக்கும்!  இப்படிப் புது நுணுக்கங்கள் புலப்படுவதற்குள் முன்பு புரிந்து படித்தவை நீறுபூத்த நெருப்பு போல் ஆகியிருக்கும்!! ஆக எந்தத் தொழில்முறைப் படிப்பிலும் உள்ளே நுழையவும் வெற்றிகரமாக வெளியில் வரவும் அதிக முயற்சியே தேவையாக இருக்கிறது.

            இந்த முயற்சியையும் வெற்றியையும் பற்றித் திருவள்ளுவர் என்ன கூறுகிறாரெனப் பார்க்கலாம். மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு நெட்டுருப் போட்டுப் படிக்கும் சாத்தியமுள்ள பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது மூளையைச் சற்றாவது கசக்கிக் கொண்டு எழுதத் தேவையுள்ள நுழைவுத் தேர்வின் மதிப்பெண்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டுமா? வள்ளுவரின் பதில் இதோ:

            கானமுயல் எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது

என்கிற குறள் மூலமாக காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறி தவறாமல் எய்த அம்பை விட வெட்டவெளியில்  நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது என்கிறார்.   நன்கு தயார் செய்து எழுதிய நுழைவுத் தேர்வில் தவறி விடுவது என்பது எப்படிச் சிறப்பாக இருக்கக் கூடும் என வினா எழும்பலாம். பாடத்தைப் புரிந்துகொண்டு படித்த அந்த மாணவர் ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து இளம் அறிவியல் எனப்படும் பி.எஸ்சி (B.Sc) படிப்பில் உன்னதமான முறையில் தேர்ச்சி பெற்று வெளியில் வந்தால் ஐஐஎம் (IIM), ஐஐடி (IIT), பெங்களூருவின் ஐஐஎஸ்சி (IISc) போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் மேல் படிப்பைத் தொடரமுடியும் என்பதே அதற்கான விடை.

            நீட் நுழைவுத் தேர்வின் முடிவுகள் வந்தபிறகு தோல்வி காரணமாக தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்குச் செல்லாமல் இருக்கப் பெற்றோர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும். சமூகத்தில் செல்வாக்கிலிருப்பவர்கள் அச் செயலை நியாயப் படுத்திப் பேசக்கூடாது. இத்தனை கால வாழ்க்கையில் நாம் அனைவரும் பாகுபாடின்றி ஒன்று புரிந்து கொண்டிருப்போம்.  குறிக்கோள்களை நோக்கி முன்னேறும் போது சில தடவைகள் நாமே செயல்முறையில்  சொதப்பிவிட்டாலும் அல்லது பல தடவைகள் முற்றிலும் மாறாகப் பலன் கிடைத்தாலும்  வாழ்க்கையில் மேலும் சில பல வாய்ப்புக்கள்  காத்துக் கொண்டிருக்கின்றன என்பதே அது.  இதைக் குழந்தைகளுக்குப் புரியும்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் அவர்கள் சரியான வழியிலேயே செல்வார்கள்.  தேர்வுக்குத் தயார் செய்யும் வரை  டாப் கியர் (top gear), பின்பு தேர்வின் முடிவு வரும் போது  கியர் மாற்றம்  என்ற சுழற்சிக்கு மாணவர்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால்  அது வாழ்க்கைக்கும்  பயனளிக்கும்.

இறுதியாக,   தமிழகத்தில் அவ்வப்போது பேசப்படும்  நிலைப்பாடுகளான சனாதன தர்மத்திற்கு எதிர்ப்புஹிந்தி கற்பதால் நேரக்கூடிய கலாசார சீரழிவு போன்ற சொற்றொடர்கள் பாரபட்சம் நிறைந்தவை (prejudiced) என்பதைச் சுருக்கமாகச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

சனாதன தர்மம் என்பதன் பொருள் எப்போது தோன்றியது என்று அறிய முடியாத  பழமையும் தொடர்ச்சியுமுள்ள (eternal) மதம் என்பதே. ஆக, மூத்த  தமிழ்க் குடியை வருணிக்க உபயோகிக்கப்படும்கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய என்ற சொற்றொடர்க்கும்  சனாதன என்ற சொல்லுக்கும் ஒரே பொருளே.  பழமைக்குப் பழமையான மதமாக இருந்தாலும் யாரையும் மதம் மாற்றி இங்கு அழைத்துவரத் தேவையில்லை என்பது போன்ற பெருமையான அம்சங்களும் இருப்பதால் சனாதன தர்மத்தைக் குறிப்பாக எதிர்க்கவோ வெறுக்கவோ ஏதுமில்லை.

ஹிந்தி கற்பதால் கலாசார சீரழிவு ஏற்படக் கூடும் என்று நினைப்பவர்கள் நாட்டில் வெகு காலமாக நிகழ்ந்து வரும் வேறு சில கலாசார சீரழிவுகளையும் எண்ணிப்பார்ப்பது நலம். உதாரணத்திற்கு, நாளும் தொலைக்காட்சியின்  வீடியோ காமிரா முன் மக்களை அலறவிட்டுச் செய்திகள் சேகரிப்பது தற்காலத்தின் வாடிக்கையாகி விட்டது. இவற்றைக் கவனித்து வளர்ந்துவரும் குழந்தைகள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகுவார்களா என்பதைச் சமூகப் பொறுப்புள்ளவர்கள் சிந்தித்துச் செயலாற்றவேண்டும்.இவ்வாறான பல சவால்களுக்கிடையில்  தமிழ்நாட்டு மக்கள் அனைவரும்  ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்ற பாரதியாரின் வழிகாட்டுதலையும் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற பாரதிதாசனின் அழைப்பையும் ஏற்று ஒன்றாகச் செயல்பட்டு முன்னேறுவோமாக. மாணவர்கள் தங்கள் கவனத்தைக் கல்வியில் செலுத்துவதற்கு ‘இளமையில் கல்’ என்ற ஔவையாரின் வார்த்தைகளும் தரமாகக் கற்பதற்குக்  ‘கற்க கசடற’ என்ற திருவள்ளுவரின் வார்த்தைகளும் துணைபுரியட்டும்.

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்!

லலிதா சீதாராமன்

(08-02-2018 அன்று எழுதப்பட்டது)

தன் தந்தத்தையே எழுதுகோலாக உபயோகித்த விநாயகர் மற்றும் தம் எழுத்துக்களால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய சமயக்குறவர் நால்வர், ஆண்டாள், அருணகிரிநாதர் போன்ற பக்த கவிகள் ஆகியவர்களின் சந்நிதிகளில் நிற்கும்போது நான் அவர்களிடம் என் எழுத்துக் கனவுகளையும் முன்வைப்பதுண்டு. தற்போது ஒரு மாத காலமாக, ஆண்டாளும் அவளது படைப்புக்களான திருப்பாவையும்  நாச்சியார் திருமொழியும்   மீண்டும் மீண்டும் பேசப்பட, இலக்கியம், காவியம், ரஸம் முதலியவற்றைப் பற்றி என் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த கருத்துக்கள் என்னை எழுதத் தூண்டின.

கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்ட ‘கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்ற  சிலேடை நயத்துடன் கூடிய பாடல் வரியில் வரும் ‘தமிழை ஆண்டாள்’ என்ற சொற்றொடர் நாற்பது வருடங்களுக்குப் பின்  மீண்டும் 2018 ஆம் வருட ஜனவரி மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து  பிரபலமாகியது.

தினமணியில் பிரசுரமான திரு வைரமுத்துவின் ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரையின் இறுதிப் பகுதியில் காட்டப்பட்டிருந்த மேற்கோள்  காரணமாகச் சர்ச்சை துவங்கியது. ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பலத்த கண்டனங்கள் எழுந்தன. கட்டுரை தினமணியின் இணையதளத்திலிருந்து அகற்றப் பட்ட பின்பும் செய்தித்தாளின் ஆசிரியரும் கட்டுரை ஆசிரியரும் மன்னிப்பு கேட்ட பின்பும் கட்டுரை ஆசிரியர் அது தன்னுடைய கருத்து அல்ல எனவும், அமெரிக்க எழுத்தாளர் கருத்தை தாம் சுட்டிக்காட்டியதாகவும் விளக்கம் அளித்த பின்பும் சலனங்கள் அடங்கவில்லை.

திரு வைரமுத்துவின் எழுத்தை இதற்கு முன் அவரது ‘மூன்றாம் உலகப்போர்’ என்ற படைப்பில் படித்திருக்கிறேன். அது எப்படி நேர்ந்ததென்றால் திரு ராஜு முருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரின் சில பகுதிகளைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்த போது அவற்றைத் தொடர்ந்து படிப்பதற்காக ஆனந்தவிகடன் வார இதழை வாங்க ஆரம்பித்தேன். அப்போது அவ்விதழில் வந்துகொண்டிருந்த மூன்றாம் உலகப்போரின் சில பகுதிகளைப் படித்தேன். ஏழை விவசாயிகளின் விளைநிலங்கள் நயவஞ்சகமாக வளைக்கப் படுவது பற்றி திரு வைரமுத்து எழுதியிருந்த இடங்கள் என் உள்ளத்தைத் தொட்டன. இக்கட்டுரையை எழுதத் துவங்கும் முன் ‘தமிழை ஆண்டாள்’  கட்டுரையை இணையதளத்தில் தேடிக் கண்டுபிடித்துப் படித்தேன்.

‘பெண் வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றெதப்படி?’ என்ற வினா கட்டுரையில் எழுப்பப்படுகிறது. ‘பெருமாள் பெயரைப் பெரியாழ்வார் பாடக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பெண் பிள்ளை பெருமானுக்குப் பிச்சி ஆகிறாள்; தெய்வக் காதலில் திளைக்கிறாள்.’ என அடுத்த வரியிலேயே விடையும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டுரையின் சில வினாக்களுக்குக் கட்டுரையிலேயே விடைகள் கிடைக்கின்றன.  ‘தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிபேதம் ஒழிந்தெதன்று சங்கூதினார்’ என்று கட்டுரையிலேயே  சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் அதற்குப் பிறகு ‘அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?’  என்ற வினா கேட்கப்படுகிறது.  மனதில் பாரதியார் தோன்றி ‘சாதிகள் இல்லையடி பாப்பா; குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;’ என  விடையளிக்கிறார்.  

ஆண்டாளின் சொல்லாட்சி சக்தி வாய்ந்த்து. ‘மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு…’ என்னும் வரிகள் குகையில் உறங்கிக் கிடந்த சிங்கம் கண் விழித்துச் சோம்பல் முறித்துக் கம்பீரமாக நடந்து வருவதைத் தத்ரூபமாகச் சித்தரிப்பது போல ஆண்டாள் பல  காட்சிகளைக் கண் முன்னே  கொண்டு நிறுத்துகிறாள்.

கட்டுரையில் திருப்பாவையிலும் நாச்சியார் திருமொழியிலும் வரும் பல இலக்கிய நயங்கள் விவரிக்கப்படுகின்றன. இடையே பஞ்ச சயனத்தின் மென்மையும் அதைக் கடந்த மேன்மையும் எனக் கவிதை நயம் காட்டப்படுகிறது. ஆண்டாளின் விடுதைலக் குரலின் வீச்சுக்கு உதாரணமாகக் கட்டுரை ஆசிரியர் பல பாசுரங்களைக் காட்டுகிறார்.  ஆனால் அந்தத் துணிச்சலும் சுதந்திரமும் அவளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுவதாகக் கூறுகிறார். ‘பெண்ணே! உனக்கு விடுதலையும் சுதந்திரமும் யார் கொடுக்க வேண்டும்? அவை நீயே அடைய வேண்டியவை.’ என்பது போன்ற முழக்கங்கள் பிற்காலப் பேரறிவைச் சார்ந்தவை என அவர் நினைத்திருக்கலாம். இவற்றில்  சிலவற்றை ஆண்டாள் என்ற பெண் எழுதினாள் என்று பார்ப்பதற்குத்  தயக்கமாக இருந்தால் நாம் இலக்கியத்தின் ஆதி காலத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு மொழியின் இலக்கிய வளத்தைப் பறை சாற்றும் காவியத்தின் தன்மையை வரையறுக்கும் போது அதில்  நவரஸங்களும்  இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. பல காவியங்களில்  நவரஸங்களில் ஒன்றான ஸ்ருங்கார ரஸத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.   கவிஞர்களும் காவியகர்த்தாக்களும் சில இடங்களில் பெண்ணிற்கு இயற்கையையும்  வேறு சில இடங்களில் இயற்கைக்குப் பெண்ணையும் உவமை காட்டுகிறார்கள்! இலக்கியத்திற்கு மட்டுமின்றி இலக்கண வரையறைகளுக்குக் கூடப் பெண் உவமையாகிறாள்.

அக இலக்கியமும் பக்தி இலக்கியமும் முற்றிலும் வேறுபட்டவை. ஆனால் அக இலக்கியத்தின் முதல் அம்சமான ஸ்ருங்கார ரஸம் பக்தி இலக்கியத்திலும் முக்கியப் பங்கு பெறுகிறது. ரஸம் என்று வரும் போது ஸ்ருங்கார ரஸமும் பக்தி ரஸமும் சில இடங்களில் ஒன்று போலப் பிணைந்து விடுகின்றன. ’நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும், என்தன் முதலும் முதலும் நீ, முடிவும் முடிவும் நீ’ என திரு வைரமுத்து எழுதிய வரிகளும் ‘முதல் நீ, முடிவும் நீ, அலர் நீ, அகிலம் நீ’ என திருமதி தாமரை எழுதிய வரிகளும் இதற்குச் சான்று. காதலியிடம் சொல்வதாக வரும் இந்தப் பாடல் வரிகள் கடவுளிடமும் சொல்லத் தகுந்தவை!

காரணம் புரியாமல் உழலும் நமது மனித வாழ்க்கையில் நம்மை விடுதலை நோக்கி இலக்கியங்களும் அவற்றின் நவரஸங்களுமே அழைத்துச் செல்கின்றன. யமுனை ஆற்றங்கரையில் நிலவொளியில் கண்ணன் புல்லாங்குழல் இசைத்துக் கொண்டு கோபியருடன் ஆடிய நடனமாகிய ராஸலீலையை பரமாத்மா – ஜீவாத்மா ஐக்கியமாக பாகவத புராணம் நமக்குக் காட்டுகிறது.

பக்தி இலக்கியத்தில் ஸ்ருங்கார ரஸத்தைக் கையாளும்போது கவிகள் நாயக நாயகி பாவத்தை (bhavam) இரு விதங்களாகக் கையாளுகிறார்கள்.

ஆழ்வார்கள் கையாண்ட விதத்தில் பரம்பொருளை நாயகனாகவும் அவனோடு ஐக்கியமாக விரும்பும் உயிரை நாயகியாகவும் பாவித்துப் பாடினார்கள். நம்மாழ்வார் தன்னைப் பராங்குச நாயகியாகவும் திருமங்கை ஆழ்வார் தன்னைப் பரகால நாயகியாகவும் பாவித்துப் பாசுரங்களை இயற்றியிருக்கிறார்கள்.

ஸ்ருங்கார ரஸத்தின் மற்றொரு விதம் இறைவனை நாயகனாகவும் இறைவியை நாயகியாகவும் கொண்டது. ஆதி சங்கரரின் ஸௌந்தர்ய லஹரி,  சமயக் குரவர் நால்வரின் தேவாரம், திருவாசகம், பிற்காலத்திய அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி முதலிய பக்தி இலக்கியங்களில் ஸ்ருங்கார ரஸத்தைக் கையாளும் போது சிவன்  நாயகனாகவும் சக்தி நாயகியாகவும் ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தில் திருமால் நாயகனாகவும் திருமகள் நாயகியாகவும்  வைத்துப் பாடப் பட்டிருக்கிறார்கள்.

மேலும் தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களில் உள்ளக் கிளர்ச்சிகளெல்லாம் அடங்கி அமைதியைத் தேடும் நிலையைப் பாடும் போதும் முன்பு இருந்த நிலையை ஸ்ருங்கார ரஸச் சாயலுடன் காட்டி ‘விட்டொழித்தேன்’ ‘துறந்தொழிந்தேன்’ என்று பாடுவது மரபாக இருந்திருக்கிறது. இக் கருத்தைக் கவிஞர் வாலி அவர்களும் ‘வாலிப வாலி’ என்று பொதிகை தொலைக்காட்சி உருவாக்கிய நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டினார். பட்டினத்தார் எல்லாவற்றையும் துறந்தவிட்டு பாடிய பாடல் ஒன்றை அதற்கு உதாரணமாகக் காட்டினார்.

ஆக, இலக்கியத்தில் ஸ்ருங்கார ரஸமும் தாய்மைப் பரிவும் கவிதை நயங்களாகக் கையாளப்படுகின்றன. ஆழ்வார்கள் மரபில் வந்த ஆண்டாள் என்ற பெண்ணிடமிருந்து  வெளிப்பட்ட நாயகி பாவத்திற்கு இயற்கையும்  ‘கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்’ என அவள் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த சூழ்நிலையும்  ஒருசேர மெருகூட்டியதால்  அவளது பாசுரங்கள் ‘பொன் மலர் நாற்றமுடைத்து’ என்கிற தரத்தில் அமைந்ததில் வியப்பேதுமில்லை.

எல்லாப் படிப்புக்களும் பட்டங்களும் தற்காலத்தில் பெருகியிருப்பது போலவே ஆராய்ச்சிப் படிப்புக்களும் பெருகிவிட்டன. ஆராய்ச்சிப் படிப்புக்கள் (Research Studies) சில நேர் எதிரான முடிவுகளைக் காட்டுகின்றன. உறுதி செய்யப்படாத ஆராய்ச்சி அறிக்கைகள் (unconfirmed research reports) என்ற வகையில் பல முரண்பாடான கருத்துக்கள் பதிவுசெய்யப்படுகின்றன. இதற்கு உதாரணமாக ‘காஃபியும் டீயும் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கிறதா, இல்லையா?’ எனவும் ‘செல்ஃபோன் கோபுரத்தால் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைகிறதா, இல்லையா?’ எனவும் காலங்காலமாக நாம் படித்துவரும் மாறுபட்ட கருத்துக்களை எண்ணிப்பார்க்கலாம். எனவே அமெரிக்க எழுத்தாளர் கருத்தைப் பொருட்படுத்தி அதற்கு மிகையான முக்கியத்துவம் கொடுத்து ‘கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்’ என்று அதிர்ச்சி அடையத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

நினைவுத் துணுக்குகள்

லலிதா சீதாராமன்

(2013ஆம் ஆண்டில் எழுதப்பட்டது)

‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தில் திரு கமல்ஹாஸனிடமும் அவரது நண்பர்களிடமும் வசமாக மாட்டிக் கொண்ட திரு கிரேஸி மோஹன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ‘ஷட் அப்!’ என்று சொல்ல ‘என்ன கெட்ட வார்த்தையெல்லாம் சொல்கிறாய்?’ என்று அவர்கள் அவர் மீது பாய்வார்கள். ‘ஷட் அப் என்பது கெட்ட வார்த்தை இல்லையே’ என்று கிரேஸி மோஹன் பயந்தும் வியந்தும் கூறியவுடன் கமலும் அவரது நண்பர்களும் ‘ஆமால்ல, அது கெட்ட வார்த்தை இல்லல்ல…’ என்று  ஒருவர் முகத்தை ஒருவர் குழப்பத்துடனும் சந்தேகத்துடனும் பார்த்துக் கொண்டு சமாளித்துக் கொள்வார்கள்.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் திரு ஆஷிஸ் நந்தி ‘கரப்ஷன்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் அதிகார முறைகேடு (அதாவது, அதிகாரங்களைத் தவறான முறையில் பயன்படுத்துதல் அல்லது அதிகார துஷ்பிரயோகம்)  பற்றிப் பேசியதும் அதற்கு எழுந்த எதிர்ப்புகளும் கண்டனங்களும்  மேற்கூறிய திரைக்காட்சியை நினைவூட்டின. “அதிகார  முறைகேடுகளை மேல் வர்க்கத்தினர் செய்யும் போது நாசுக்காகச் செய்துவிட்டு தாங்கள் பெற்றவற்றைத் தங்களது திறமைக்கும் தகுதிக்கும் கிடைத்தவை போல் காட்டி விடுகிறார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த நளினம் இன்னும் வரவில்லை. அவர்கள் வெளிப்படையாகச் செய்துவிட்டு மாட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இப்போது அவர்களும் இந்தக் கலையில் தேறி வருகிறார்கள். எனக்கு அதனாலேயே இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்று பொருள்பட வஞ்சப்புகழ்ச்சி அணி நயத்துடன் இந்தியாவின் அதிகார முறைகேடுகளை  எள்ளி நகையாடி அவர் உரையாற்றினார். அதை ஊடகங்கள்  தங்களுக்கே உரிய பரபரப்பான முறையில் வெளியிட, தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அவர்  தரக்குறைவாகப் பேசியதாக பலத்த கண்டனங்களும்  ஆர்ப்பாட்டங்களும் எழுந்து வழக்குப் பதிவுகளும் செய்யப்பட்டன. சில அறிவு ஜீவிகளும்  இலக்கிய ஆர்வலர்களும் ஆஷிஸ் நந்தியின் கருத்துக்கள் பற்றியும் அவற்றை அவர் வெளியிடும் விதம் பற்றியும்  இதற்கு முன்பு அவர் கூறியிருந்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் அவற்றிற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளையும் விலாவாரியாக எழுதி   ‘தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி தவறாகப் பேசுபவர் அல்ல அவர்’  என்று பரிந்து வந்தார்கள். பரபரப்பாக செய்தி வெளியிட்ட செய்தித்தாள்களும் ஆர அமரத் தலையங்கம் எழுதி ஆஷிஸ் நந்திக்கு ஆதரவு தந்தன. ‘நான் என் வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே போராடியிருக்கிறேன். இப்போது அவர்களுக்காகச் சிறைக்கு வேண்டுமானாலும் செல்லத் தயார்’ என்று தன்னிலை விளக்கம் அளித்தார் ஆஷிஸ் நந்தி.

‘கரப்ஷன்’ செய்யப் படும் விதம் பற்றி ஆஷிஸ் நந்தி பேசியதைப் படித்த போது எழுபதுகளின் பிற்பகுதியில் அமைக்கப் பட்ட ஸர்க்காரியா கமிஷன் உபயோகப்படுத்திய  ‘ஸயன்டிஃபிக் கரப்ஷன்’  (விஞ்ஞான முறையில் செய்யப்படும் அதிகார முறைகேடு) என்ற சொற்றொடரும் அதைப் பற்றி தொலைக்காட்சியில் பேசும் போது ‘கரப்ஷன் ஒரு கலையாகவே செய்யப்பட்டது’ என்று திரு. சோ வருணித்ததும் ஞாபகத்துக்கு வந்தன. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற சிலப்பதிகார வரியும் நினைவில் வந்து சென்றது.

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ஆஷிஸ் நந்தி பேசியது சர்ச்சைக்குள்ளானது போலவே .சில மாதங்களுக்கு முன்பு நோபல் பரிசாளர் திரு வி.எஸ். நைபாலுக்கு (V.S.Naipaul) ‘வாழ்நாள் சாதனை விருது’ கொடுக்கப் பட்ட மும்பை இலக்கிய விழாவில்  திரு கிரிஷ் கர்னாட் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது.  ‘முஸ்லிம் படையெடுப்பாளர்கள் மீது குற்றம் சாட்டி எழுதிய நைபால் இந்திய இசைக்கு அவர்கள் செய்த பங்களிப்பு பற்றி ஏன் எழுதவில்லை?’   என்று அந்த விழாவில் அவர் வினா எழுப்பினார். மேலும் நைபால் ஒரு இந்தியர் அல்ல என்றும் அவர் தன்னை  ஒரு போதும் இந்தியராகச் சொல்லிக் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார். நைபாலையும் அவரது எழுத்துக்களையும் பற்றிச் சரமாரியாகக் குறை கூறினார். அவர் பேசியதற்கு எதிராகவும் ஆதரவாகவும் ஊடகங்களில் எழுதப் பட்ட கடிதங்களும் கட்டுரைகளும் ‘எதைக் கூறினாலும் அதை ஆதரிக்கப் பத்து பேர்களும் எதிர்க்கப் பத்து பேர்களும் இருக்கிறார்கள்’ என்ற எழுத்தாளர் சுஜாதாவின் கருத்தை ஞாபகப் படுத்தின.

2013-14க்கான நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் திரு. ப.சிதம்பரம் பெண்களால் மட்டும் நடத்தப்படும் பொதுத் துறை வங்கியை உருவாக்கப் போவதாகக் கூறினார். பெண் நீதி மன்றங்கள் வேண்டும் என்று சில பேர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ‘ஆண்-பெண் பேத உணர்வு மறைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டிய இந்த நாளில் பெண்களால் மட்டும் நடத்தப்படும் வங்கி என்பது காலத்தில் பின்னோக்கி செல்வது போலிருக்கிறது‘ என்ற அறிவு பூர்வமான கருத்துக்களும் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.  பிரச்சினைகளையும் தீர்வுகளையும் ஏன் ஆண் என்றும் பெண் என்றும் தனித்தனியாக அணுக வேண்டும்?  புதுதில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிர் நீத்த மருத்துவ மாணவிக்காக மக்கள் வருத்தம் தெரிவித்துக் கூடிய கூட்டங்களில் ஆண்களும் சம அளவில் இருந்தார்கள். அந்த முகங்களில் தெரிந்த வேதனைகளில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லையே?

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து நார்வே நாட்டிற்கு வேலை பார்க்கச் சென்ற ஒரு இளைஞருக்கும் அவரது மனைவிக்கும் அங்கு ஏற்பட்ட அனுபவங்கள் மிகக் கொடியவை. அது வரை நாம் கேள்விப் பட்டிராத ‘அதிசயம், ஆனால் உண்மை’ என்கிற விதமாக இருந்தது அவர்களது பிரச்சினை. தங்கள் குழந்தைகளிடம் அப்பெற்றோர்  போதுமான கவனம் செலுத்தவில்லை என்று  தாங்கள் கணித்திருப்பதாகக் கூறிய நார்வே நாட்டின் அரசு அமைப்புகள்  அக் குழந்தைகளைக் குழந்தைகள் நல மையத்தில் வைத்துப் பராமரித்து வந்தன. பெற்றோர்கள் மிக மிகக் குறைந்த நேரமே குழந்தைகளுடன் இருக்க அனுமதிக்கப்பட்டார்கள். இத்தனைக்கும் அவர்களது மூன்று வயது மகனுக்கு உள ரீதியாகக் கூடுதல் கவனம் தேவைப்பட்டது. அவர்களது மகள் ஒரு வயது கூட நிரம்பாத பச்சிளம் குழந்தை. தங்கள் குழந்தைகளைத் தங்களிடம் கொடுக்கக் கோரி அப் பெற்றோர் அந்நாட்டு அரசாங்கத்துடன் பல மாதங்களாகப் போராடிக் கொண்டிருந்தார்கள். என்னே உலக நீதி! மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் சேர்ந்த முன்னணித் தலைவர் திருமதி பிருந்தா கரத் அக் குழந்தைகளின்  தாத்தா பாட்டியை அப்போதைய குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீலிடம் அழைத்துச் சென்று உதவி கேட்டார். உடனே அப்போதைய இந்திய வெளி உறவுத்துறை அமைச்சர் திரு. எஸ்.எம்.கிருஷ்ணா நார்வே நாட்டுடன் தொடர்பு கொண்டு பிரச்சினையைத் தீர்த்து வைக்க முயற்சித்தார். இருந்தாலும்  நார்வே நாடு அவர்களது சட்டப்படி செய்ய வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்த பிறகுதான் குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்ப முடியும் என்றது; ‘நன்கு பார்த்துக் கொள்வார் என்று எங்களுக்குத் திருப்தி ஏற்படுத்தும் நபரிடம்தான் குழந்தைகளை ஒப்படைப்போம்’  என்றது. அக் குழந்தைகளின் சித்தப்பா தன் அண்ணனுக்கு உதவி செய்ய முன்வந்தார். பல் மருத்துவரான அவர் நார்வே சென்று அந்த அரசு அமைப்புகள் கொடுத்த பயிற்சியை எடுத்துக் கொண்டு அவர்களது திருப்திக்குப் பாத்திரமானார். இதற்கிடையில் நார்வே அரசுடன் போராடும் வலியிலும் ஏமாற்றங்களிலும் ஆயாசம் அடைந்திருந்த கணவனும் மனைவியும் தங்களுக்குள்ளும் மோதிக் கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். ‘வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்தது போல’ குழந்தைகளைத் திரும்பப் பெறும் நாள் கூடி வரும் போது அவர்களுக்குள்ளான மோதல் உலகுக்கு வெட்ட வெளிச்சமாகி  கணவர் ‘மனைவிக்குப் போதுமான மனப் பக்குவம் இல்லை’ என்பது மாதிரியான குற்றச்சாட்டைக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு வழியாகக் குழந்தைகள் சித்தப்பாவிடம் ஒப்படைக்கப்பட்ட போது இரு நாடுகள் அளவில் பேசப்பட்ட பிரச்சினை இரு சம்பந்தி வீடுகளுக்கிடையான பிரச்சினை ஆகியது. இந்தியா அழைத்து வந்த குழந்தைகளைச் சித்தப்பா நன்கு கவனித்துக் கொண்டாலும் இரு குடும்பங்களுக்கிடையே  இருந்த தகராறால் தாய்க்குத் தன் குழந்தைகளைப் பார்க்கவும் அவர்களுடனிருக்கவும் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. காவல் துறையிடம் புகார் மற்றும் நீதி மன்றத்தில் வழக்கு என்பது அவர்களது அன்றாட வாழ்க்கையின் அம்சங்களாகி விட்டன. நார்வேயிலேயே இருந்த குழந்தைகளின் தந்தை தன் மீது மனைவி வீட்டினர் வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் தான் இந்தியா வந்தால் கைது செய்யப் படும் ஆபத்து இருப்பதால் தான் இந்தியா வர இயலவில்லை என்றும் கூறினார்.  இதற்கிடையில் தாய் தான் போதுமான அளவு மன நலத்துடன் இருப்பதாக உரிய அமைப்பின் பரிசோதனைகளுக்கு உட்பட்டு  சான்றிதழ் பெற்று வந்தார். குழந்தைகளின் பாதுகாப்பு வழக்கை இடைக்கால தீர்ப்புக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி திரு தீபாங்கர் தத்தா “குழந்தைகள் ஒரு நாள் தாயிடம் இருக்கட்டும்”  என்று உத்தரவு போட்டார். மறுநாள் குழந்தைகளின் தாயையும் சித்தப்பாவையும் தனித்தனியாக தனது அறையில் விசாரித்தார்.  “இந்த ஒரு நாள் இரவும் குழந்தைகள் தாயிடமே இருக்கட்டும். இடைக்காலத் தீர்ப்பை நாளைக்குச் சொல்கிறேன். எனக்கு இன்னும் இந்த வழக்கில் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது” என்றார்.  அந்தத் தாய்க்குச் சாதகமாக மறுநாள் தீர்ப்பு வர வேண்டுமே என்று நிறையப் பேர் அன்றைய இரவில் கடவுளிடம் பிரார்த்தித்திருப்பார்கள். மறுநாள் “குழந்தைகள் தாயிடம் இருக்கட்டும்“ என்ற இடைக்காலத் தீர்ப்பை நீதிபதி வழங்கினார். “நான் நன்றாகத்தானே பார்த்துக் கொண்டேன்” என்று புலம்பினார் சித்தப்பா. அவர் எடுத்துக் கொண்ட முயற்சி மகத்தானதுதான் என்றாலும் குழந்தைகள் தாயிடம் இருப்பதுதானே இயற்கை, மற்றும் அவரது தனிப்பட்ட எதிர்காலத்துக்கும் அதுதானே நல்லது!  மேற்கண்ட பிரச்சினையை ஒட்டி மனதில் நிறையக் கேள்விகள் எழுகின்றன. இது பொதுவான பிரச்சினையா அல்லது பெண்களுக்கான பிரச்சினையா?  கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர்  வீசிக்கொண்ட குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்கிறதா இல்லையா? பொய் வழக்குகள் போடுவதும் பொய் சாட்சி சொல்வதும் அறநெறிப்படியும் தவறு அல்லவா?  வரதட்சிணைத் தடுப்புச் சட்டம் போன்று பெண்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தை வஞ்சம் தீர்க்கும் ஆயுதமாகச் சில பெண்கள் தவறாக  உபயோகப் படுத்தினால் ‘புலி வருகிறது’ கதை போல ஆகி அச்சட்டம் உண்மையான ஆபத்துக்களின் போது பயனற்றுப் போய்விடாதா? பிரச்சினைகளின் வெப்பம் சற்று அடங்கியிருக்கும் தருணத்தில், பொய் வழக்குகள் போடப்பட்டிருந்தால் அவை திரும்பப் பெறப் பட்டு,  தாய், தந்தை இருவரும் சமரசம் செய்து கொண்டு அக் குழந்தைகளுடன் இந்தியாவில் தங்கள்  வாழ்க்கையைத் தொடர்ந்தால் எவ்வளவு நன்மை பயக்கும்!  

அமெரிக்காவில் கனெக்டிகட் மாநிலத்தில் டிசம்பர் 2012ல் ஒரு பள்ளிக்கூடத்தில் புகுந்து இருபது வயது வாலிபர் ஒருவர்  நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் இருபது பள்ளிக் குழந்தைகள் உட்பட இருபத்தாறு பேர்கள் பலியான சம்பவம் எல்லோரையும் அதிர வைத்தது.   அந்த வாலிபர் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் தன் தாயையும் சுட்டுவிட்டு வந்திருந்தார். பள்ளிச் சம்பவத்தின் இறுதியில் தன்னையும் சுட்டுக் கொண்டார். இருபத்தெட்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மூன்று துப்பாக்கிகளை வீட்டில் வாங்கி வைத்திருந்தவர் அந்த வாலிபரின் தாய்! அமெரிக்காவில் ஒவ்வொரு துப்பாக்கிச் சூடு நடைபெறும் போதும் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையைக் கட்டுப்படுத்த  வேண்டும் என்ற வாதம் வலுப்படுவதும்  துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம்  அந்த வாதத்தைப் பலமாக எதிர்ப்பதும் வழக்கம், அத்தகைய விவாதம் தொலைக்காட்சியில் நடந்து  கொண்டிருந்தது. துப்பாக்கி உரிமையை ஆதரிப்பவர்கள்  ‘போதிய துப்பாக்கிகள் இல்லாததால்தான் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. பள்ளிகளுக்குத் துப்பாக்கிகளைக் கொடுத்து விடலாம்’ என்று விநோதமான ஆலோசனையைக் கூறினார்கள். அப்போது அவ் விவாதத்தில்  கலந்து கொண்ட ஒருவர், “நான் ஆர்மியில் இருந்திருக்கிறேன். துப்பாக்கிகளைக் கையாண்டிருக்கிறேன். போதும்! பெற்றோர் துப்பாக்கிகளைக் கொஞ்சம் கீழே வைத்து விட்டு தத்தம்  வீட்டுக் குழந்தைகளைக் கவனிக்கட்டும்.  ஒரு வேளை அந்த இருபது வயதுக் குழந்தைக்கு அன்பும் அரவணைப்பும் கிடைத்திருந்தால் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழாமல் கூட இருந்திருக்கலாம்”  என்று பொருள்படக் கூறிய கருத்து  பல பேரின் இதயத்தைத் தொட்டிருக்கும்.

About Site

The writing journey of the author started right from the year 1981, when she wrote her first article for IOBian, the in-house journal of Indian Overseas Bank, her former employer. She had written twelve articles, mostly in Tamil and a few in English, in the issues of IOBian. She was recognized a lot for those articles. Her colleagues wished that she wrote more frequently.

In recent years, her English articles on ‘Make in India’ and ‘Demonetisation’ had been published in ‘Management Accountant’ and the article on ‘Financial Inclusion’ had been published in ‘Bank Quest’, both being reputed professional journals. Intellectuals viewed those articles as excellently researched and neatly presented works. Readers had universal praise for the flow, comprehensiveness and unbiasedness of the contents.

Her three short stories and a few articles in Tamil, featuring some social topics, remained with her without appearing anywhere!

All these works, except two bank related IOBian articles, have been now published in this website.

ஐம்பெருங் காப்பியங்களில் இந்துமதக் கருத்துக்கள்

(2000ஆம் ஆண்டு ஜனவரியில் எழுதப்பட்டது )

https://lalithasitaraman.in/wp-content/uploads/2020/09/iymperum-kaappiyangalil.pdf