(2012ஆம் ஆண்டில் எழுதி 2020ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட சிறுகதை)
முதலை வாயிலிருந்து காலை எடுக்க முடியாமல் “ஆதிமூலமே!” என்று கதறிய யானையை மஹாவிஷ்ணு கருடன் மீது பறந்தோடி வந்து காப்பாற்றினார் என்று தொலைக்காட்சியில் பாகவதர் உருக்கமாக வருணித்துக் கொண்டிருந்தார். கமலா மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நாமெல்லாமும் ஸம்ஸாரம் என்னும் முதலை வாயில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம்மைக் காப்பாற்றவும் கடவுள் வருகிறார். ஆனால் அவர் அப்போது சங்கு சக்கரம் தாங்கி கருடன் மீது வருவதில்லை. மனித உருவங்களில்தான் வந்து உதவி செய்கிறார்……” என்றார் பாகவதர்.
“உண்மைதான். கடவுள் ஓடி ஓடித்தான் வருகிறார். ஆதிமூலமே என்று கதற மறந்தாலும் ஓடி வந்து விடுகிறார்“ என்று நினைத்த கமலாவின் கண்கள் ஈரமாயின.
அவளுடைய மனக்கண் முன் செய்தித் தாள்களில் படித்து மனதில் ஆழமாகப் பதிந்த சில காட்சிகள் விரிந்தன.
சில வருடங்களுக்கு முன் சென்னை நீலாங்கரையில் சாலை ஓரக் கழிவு நீர்ச் சாக்கடைக்குள் ஒன்பது குழந்தைகளுடனும் ஒரு மூதாட்டியுடனும் ஒரு ஷேர் ஆட்டோ விழுந்து விட சாலையில் சென்று கொண்டிருந்த சிலர் சிறிதும் தாமதியாமல் சாக்கடைக்குள் குதித்து உள்ளே விழுந்தவர்களைப் பத்திரமாக வெளிக் கொணர்ந்தனர்.
சென்னை அண்ணா மேம்பாலத்தில் பஸ் ஒன்று தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு உருண்டு விழுந்தபோது அருகிலிருந்த மக்கள் ஓடி வந்து உதவி செய்தனர்.
டிஸம்பர் 2011ல் கொல்கத்தாவில் ஒரு மருத்துவ மனையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்ட போது அருகில் இருக்கும் குடிசைகளிலிருந்து இளைஞர்கள் ஓடி வந்து சுவரேறிக் குதித்து மருத்துவ மனைக்குள் சென்று பல உயிர்களைக் காப்பாற்றினார்கள்.
எல்லாவற்றுக்கும் சிகரமாகச் சமீபத்திய கொரோனா காலத்தில் ஆகஸ்ட் 7, 2020 அன்று துபாயிலிருந்து பயணிகளை அழைத்து வந்த வந்தே பாரத் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் இறங்கிய போது மூன்றாக உடைந்துவிட அப்போது அதிக உயிர்ச் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்குக் காரணம் விமானத்தில் சிக்கியிருந்தவர்களைக் காப்பாற்ற அருகிலிருந்த கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதி உள்ளூர்வாசிகள் மழையையும் கொரோனா தொற்று அபாயத்தையும் பொருட்படுத்தாமல் உயிர்களைக் காப்பாற்றுவதையே நோக்கமாகக் கொண்டு ஓடிவந்து விமான நிலையப் பணியாளர்களுடன் இணைந்து மின்னல் வேகத்தில் உதவியதாலல்லவா!
பிறருக்குப் பெருந்துன்பங்கள் நேரும் போது மனிதர்கள் தங்களை மறந்து உதவி செய்யும் தருணங்களில் கடவுளின் அம்சங்களாக அல்லவா இருக்கிறார்கள்!
கடவுள் எங்கும் எல்லா உயிர்களிலும் நிறைந்திருந்து கஜேந்திர மோட்சங்களை நடத்திக் கொண்டேதான் இருக்கிறார் என்று நினைத்தபடி எழுந்தாள் கமலா.