கூடாங்குளம்

லலிதா சீதாராமன்

(2012ஆம் ஆண்டில் எழுதப்பட்டது)

சங்கர் கூடாங்குளத்தில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். அவனது மனைவி கோமதி அங்கு ஒரு தனியார் வங்கியில்  பணிபுரிகிறாள்.

சங்கர் பள்ளியில் படிக்கும் நாட்களிலிருந்தே அணு மின் உலை அந்த ஊரின் பேச்சுகளோடும் நினைவுகளோடும் கலந்திருந்த ஒரு பெயர். ரஷ்ய நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் கட்டப் பட்டு வருகிறது.

ஆனால் மார்ச் 2011ல் ஜப்பானில் நிகழ்ந்த பூகம்பமும் சுனாமியும் அவை அணு மின் உலைகளுக்கு ஏற்படுத்திய பேராபத்தும் கூடாங்குளத்தில் திடீர்த் திருப்பங்களைக் கொண்டு வந்தன. அணுமின் உலைக்கு எதிர்ப்புப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. கோமதியும் சங்கரும்  அப்போராட்டங்களில் ஆரம்பத்தில் வீராவேசத்துடன் கலந்து கொண்டனர். போராட்டங்கள் மாதக் கணக்கில் நடந்து கொண்டிருந்தன.

அணுமின் உலையை ரொம்ப நாட்களுக்கு மூடி வைக்க முடியாது என்றும் விஞ்ஞானிகளையும் பொரியியல் வல்லுநர்களையும் ரொம்ப நாட்களுக்குச் சும்மா உட்கார்த்தி வைக்க முடியாது என்றும் ரஷிய அரசு எச்சரித்தவுடன் மத்திய மாநில அரசுகள் வேகமாகச் செயல்பட ஆரம்பித்தன.

பிரதம மந்திரி அங்கு விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என்று அறிவித்தார். முதலமைச்சர் உலையின் பாதுகாப்பு அம்சங்கள் திருப்தியாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய நிபுணர்கள் கமிட்டியை அமைத்தார்.   கமிட்டி உலையின் பாதுகாப்பு அம்சங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியது. அரசுத் தரப்பிலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்கள் மக்களது அச்சத்தைப் போக்க முயற்சி செய்தன. மாநில அரசு ஐநூறு கோடி ரூபாய்க்கு கூடாங்குள மக்களுக்கு நலத்திட்டங்களை அறிவித்தது.

இப்போது போராட்டத்தின் உத்வேகம் குறைய ஆரம்பித்தது. ஆனாலும் முழுவதும் நின்றபாடில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வேறு தொடரப்பட்டிருந்தது.

சங்கருக்கும் கோமதிக்கும் அரசாங்கமும் நிபுணர்களும் சொல்வதையும் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது.  இருந்தாலும் போராட்டக் குழு நிர்வாகிகளின் வற்புறுத்தலின் பொருட்டு அவர்கள் இருவரும் அன்றைய தினம்  எதிர்ப்புப் போராட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தனர்.  அவர்களது இரண்டு வயது மகன் சரவணன் வீட்டில் தாத்தா பாட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

கோமதி வீட்டு வேலைகளைக் கவனிக்க சமையலறைக்கு விரைந்தாள்.

“மீட்டிங்ல என்னப்பா சொன்னாங்க?” கவலையுடனும் குழப்பத்துடனும் மகனைக் கேட்டார் தர்மலிங்கம்.

“அதான்ப்பா, ஜப்பான் சுனாமிக்குப் பிறகு மத்த நாட்டுலல்லாம் அணுமின் உலைங்கள மூடிட்டு வரபோது இங்க மட்டும் எதுக்குன்னு கேக்குறாங்க”

 “ஏம்ப்பா ஜப்பான்லயே திரும்பவும் அணுமின்சாரத்த பாதுகாப்பான மொறயில கொண்டுவரலாமான்னு யோசிச்சிட்டிருக்காங்களாமே! அணுமின்சாரந்தான் சுத்துச்சூழல மாசுபடுத்தாதுனு சொல்றாங்களே!”

“அணுமின் உலையக் குளிர வைக்கத் தண்ணி வசதி கூடப் பத்தாதாம்.” சங்கர் தொடர்ந்தான்.

“எனக்கு நெசமாலுமே புரியல்ல! பெரிய பெரிய விஞ்ஞானிங்கள தமிழக அரசு அனுப்பி வச்சது. அவங்க பாத்துட்டு பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் நல்லாருக்கு, ஒண்ணும் ஆபத்து ஏற்படாதுன்னுதானே சொல்லிட்டுப் போனாங்க?!”

ஒரு வருட காலமாகக் கருத்துக்களையும் மாற்றுக் கருத்துக்களையும் கேட்டுக்கேட்டு தர்மலிங்கத்துக்கு அலுத்துப் போயிருந்தது.

 “கேஸ் நெடி வர மாதிரி இல்ல?” திடீரெனக் கேட்டார் ராணி.

“ஆமாம்மா” விழுந்தடித்துக்  கொண்டு சமையலறைக்கு ஓடினான் சங்கர்.

ராணியும் தர்மலிங்கமும் பதறியபடி  கூடவே சென்றார்கள். கோமதி பின்பக்க வராண்டாவில் துணி காய வைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை சரவணன் கால் விரல் நுனிகளில் நின்று எம்பிக்கொண்டு சமையல் மேடையை எட்டி கேஸ் அடுப்பின்  பர்னர் நாபுகளை  மும்முரமாகத் திறந்தும் மூடியும் செய்து கொண்டிருந்தான்.  பாய்ந்து சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்ட சங்கர் வேகமாக பர்னர் நாபுகளை மூடினான். குழந்தையை அதட்டினான்.  சமையலறை மற்றும் ஹாலின் ஜன்னல் கதவுகளை நன்கு திறந்துவிட்டான். “கொஞ்ச நேரத்துக்கு எந்த ஸ்விச்சையும் ஆனோ ஆஃபோ செய்யாதீங்க” என்றான்.

பதட்டமான குரல்கள் கேட்டு கோமதி ஹாலுக்கு ஓடி வந்தாள். நடந்ததைக் கேட்டு விதிர்விதிர்த்து நின்றாள்.

“கவனம் இல்லாட்டி பெரிய ஆபத்துதான். அதுக்காக காஸ் அடுப்ப வாணான்னு சொல்ல முடியுமா” என்றார் ராணி.

“இனிமே நீங்க கிச்சனை விட்டு வெளிய வரதுன்னா சிலிண்டர் வால்வையும் மூடிட்டு வாங்க” என்று மனைவியையும் மருமகளையும் எச்சரித்தார் தர்மலிங்கம். இருவரும் தலையசைத்தனர்.

“சங்கர், நீ மீட்டிங் போயிருந்தப்ப சென்னைலேர்ந்து ஃபோன் வந்துச்சு” என்றார் தர்மலிங்கம்.

“அக்கா என்ன சொன்னாங்கப்பா?” என்றான் சங்கர். அவனது அக்கா கலா அவனை விடப் பத்து வயது மூத்தவள். கணவனுக்கு நல்ல உத்தியோகம். அவர்களது மகன் ரமேஷ் இந்த வருடம் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான்.

“ரமேஷ்தான் பேசினான். அவனுக்கு மொபெட் வாங்கித் தர மாட்டேங்குறாங்குளாம் உங்க அக்காவும் மாமனும்.” தர்மலிங்கம் சிரித்தார்.

“ஏன்?”

“நிறைய டூவீலர் விபத்துங்க தினமும் நடக்குதாம்” கவலையுடன் சொன்னார் தர்மலிங்கம்.

“சரிதான்.  நடந்துபோனாலும் சில சமயம் ஆபத்து வரத்தானே செய்யுது. அவனுக்கு ஃப்ரண்ட்ஸ் மாதிரி வண்டி ஓட்ட ஆசை இருக்காதா?” என்றான் சங்கர்.

“அவனுக்கு பத்திரமா ஓட்ட கத்துக் குடுத்து லைசென்ஸ் வாங்கிக் குடுக்கணும். அதுக்கு மேல கடவுள் கிட்ட ஒப்படச்சு செய்யணுந்தான்.” என்றார் ராணி.

தர்மலிங்கம் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். தன் மனைவி சொன்ன கருத்து வீட்டுக்கு மட்டுமில்லை, நாட்டுக்கும் பொருந்தும் என நினைத்துக் கொண்டார்.

Published by Lalitha Sitaraman

Author of the site is a retired banker, an avid reader, a keen learner and an admired writer. Her subjects of interests include Mathematics, Computer Applications, Languages and much more. Joined in IIT Madras as a Ph.D. scholar in July, 2023.

Leave a comment