(08-02-2018 அன்று எழுதப்பட்டது)
தன் தந்தத்தையே எழுதுகோலாக உபயோகித்த விநாயகர் மற்றும் தம் எழுத்துக்களால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய சமயக்குறவர் நால்வர், ஆண்டாள், அருணகிரிநாதர் போன்ற பக்த கவிகள் ஆகியவர்களின் சந்நிதிகளில் நிற்கும்போது நான் அவர்களிடம் என் எழுத்துக் கனவுகளையும் முன்வைப்பதுண்டு. தற்போது ஒரு மாத காலமாக, ஆண்டாளும் அவளது படைப்புக்களான திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் மீண்டும் மீண்டும் பேசப்பட, இலக்கியம், காவியம், ரஸம் முதலியவற்றைப் பற்றி என் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த கருத்துக்கள் என்னை எழுதத் தூண்டின.
கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்ட ‘கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்ற சிலேடை நயத்துடன் கூடிய பாடல் வரியில் வரும் ‘தமிழை ஆண்டாள்’ என்ற சொற்றொடர் நாற்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் 2018 ஆம் வருட ஜனவரி மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து பிரபலமாகியது.
தினமணியில் பிரசுரமான திரு வைரமுத்துவின் ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரையின் இறுதிப் பகுதியில் காட்டப்பட்டிருந்த மேற்கோள் காரணமாகச் சர்ச்சை துவங்கியது. ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பலத்த கண்டனங்கள் எழுந்தன. கட்டுரை தினமணியின் இணையதளத்திலிருந்து அகற்றப் பட்ட பின்பும் செய்தித்தாளின் ஆசிரியரும் கட்டுரை ஆசிரியரும் மன்னிப்பு கேட்ட பின்பும் கட்டுரை ஆசிரியர் அது தன்னுடைய கருத்து அல்ல எனவும், அமெரிக்க எழுத்தாளர் கருத்தை தாம் சுட்டிக்காட்டியதாகவும் விளக்கம் அளித்த பின்பும் சலனங்கள் அடங்கவில்லை.
திரு வைரமுத்துவின் எழுத்தை இதற்கு முன் அவரது ‘மூன்றாம் உலகப்போர்’ என்ற படைப்பில் படித்திருக்கிறேன். அது எப்படி நேர்ந்ததென்றால் திரு ராஜு முருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரின் சில பகுதிகளைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்த போது அவற்றைத் தொடர்ந்து படிப்பதற்காக ஆனந்தவிகடன் வார இதழை வாங்க ஆரம்பித்தேன். அப்போது அவ்விதழில் வந்துகொண்டிருந்த மூன்றாம் உலகப்போரின் சில பகுதிகளைப் படித்தேன். ஏழை விவசாயிகளின் விளைநிலங்கள் நயவஞ்சகமாக வளைக்கப் படுவது பற்றி திரு வைரமுத்து எழுதியிருந்த இடங்கள் என் உள்ளத்தைத் தொட்டன. இக்கட்டுரையை எழுதத் துவங்கும் முன் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை இணையதளத்தில் தேடிக் கண்டுபிடித்துப் படித்தேன்.
‘பெண் வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றெதப்படி?’ என்ற வினா கட்டுரையில் எழுப்பப்படுகிறது. ‘பெருமாள் பெயரைப் பெரியாழ்வார் பாடக் கேட்டுக் கேட்டு வளர்ந்த பெண் பிள்ளை பெருமானுக்குப் பிச்சி ஆகிறாள்; தெய்வக் காதலில் திளைக்கிறாள்.’ என அடுத்த வரியிலேயே விடையும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டுரையின் சில வினாக்களுக்குக் கட்டுரையிலேயே விடைகள் கிடைக்கின்றன. ‘தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிபேதம் ஒழிந்தெதன்று சங்கூதினார்’ என்று கட்டுரையிலேயே சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் அதற்குப் பிறகு ‘அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?’ என்ற வினா கேட்கப்படுகிறது. மனதில் பாரதியார் தோன்றி ‘சாதிகள் இல்லையடி பாப்பா; குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;’ என விடையளிக்கிறார்.
ஆண்டாளின் சொல்லாட்சி சக்தி வாய்ந்த்து. ‘மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு…’ என்னும் வரிகள் குகையில் உறங்கிக் கிடந்த சிங்கம் கண் விழித்துச் சோம்பல் முறித்துக் கம்பீரமாக நடந்து வருவதைத் தத்ரூபமாகச் சித்தரிப்பது போல ஆண்டாள் பல காட்சிகளைக் கண் முன்னே கொண்டு நிறுத்துகிறாள்.
கட்டுரையில் திருப்பாவையிலும் நாச்சியார் திருமொழியிலும் வரும் பல இலக்கிய நயங்கள் விவரிக்கப்படுகின்றன. இடையே பஞ்ச சயனத்தின் மென்மையும் அதைக் கடந்த மேன்மையும் எனக் கவிதை நயம் காட்டப்படுகிறது. ஆண்டாளின் விடுதைலக் குரலின் வீச்சுக்கு உதாரணமாகக் கட்டுரை ஆசிரியர் பல பாசுரங்களைக் காட்டுகிறார். ஆனால் அந்தத் துணிச்சலும் சுதந்திரமும் அவளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுவதாகக் கூறுகிறார். ‘பெண்ணே! உனக்கு விடுதலையும் சுதந்திரமும் யார் கொடுக்க வேண்டும்? அவை நீயே அடைய வேண்டியவை.’ என்பது போன்ற முழக்கங்கள் பிற்காலப் பேரறிவைச் சார்ந்தவை என அவர் நினைத்திருக்கலாம். இவற்றில் சிலவற்றை ஆண்டாள் என்ற பெண் எழுதினாள் என்று பார்ப்பதற்குத் தயக்கமாக இருந்தால் நாம் இலக்கியத்தின் ஆதி காலத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு மொழியின் இலக்கிய வளத்தைப் பறை சாற்றும் காவியத்தின் தன்மையை வரையறுக்கும் போது அதில் நவரஸங்களும் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. பல காவியங்களில் நவரஸங்களில் ஒன்றான ஸ்ருங்கார ரஸத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கவிஞர்களும் காவியகர்த்தாக்களும் சில இடங்களில் பெண்ணிற்கு இயற்கையையும் வேறு சில இடங்களில் இயற்கைக்குப் பெண்ணையும் உவமை காட்டுகிறார்கள்! இலக்கியத்திற்கு மட்டுமின்றி இலக்கண வரையறைகளுக்குக் கூடப் பெண் உவமையாகிறாள்.
அக இலக்கியமும் பக்தி இலக்கியமும் முற்றிலும் வேறுபட்டவை. ஆனால் அக இலக்கியத்தின் முதல் அம்சமான ஸ்ருங்கார ரஸம் பக்தி இலக்கியத்திலும் முக்கியப் பங்கு பெறுகிறது. ரஸம் என்று வரும் போது ஸ்ருங்கார ரஸமும் பக்தி ரஸமும் சில இடங்களில் ஒன்று போலப் பிணைந்து விடுகின்றன. ’நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும், என்தன் முதலும் முதலும் நீ, முடிவும் முடிவும் நீ’ என திரு வைரமுத்து எழுதிய வரிகளும் ‘முதல் நீ, முடிவும் நீ, அலர் நீ, அகிலம் நீ’ என திருமதி தாமரை எழுதிய வரிகளும் இதற்குச் சான்று. காதலியிடம் சொல்வதாக வரும் இந்தப் பாடல் வரிகள் கடவுளிடமும் சொல்லத் தகுந்தவை!
காரணம் புரியாமல் உழலும் நமது மனித வாழ்க்கையில் நம்மை விடுதலை நோக்கி இலக்கியங்களும் அவற்றின் நவரஸங்களுமே அழைத்துச் செல்கின்றன. யமுனை ஆற்றங்கரையில் நிலவொளியில் கண்ணன் புல்லாங்குழல் இசைத்துக் கொண்டு கோபியருடன் ஆடிய நடனமாகிய ராஸலீலையை பரமாத்மா – ஜீவாத்மா ஐக்கியமாக பாகவத புராணம் நமக்குக் காட்டுகிறது.
பக்தி இலக்கியத்தில் ஸ்ருங்கார ரஸத்தைக் கையாளும்போது கவிகள் நாயக நாயகி பாவத்தை (bhavam) இரு விதங்களாகக் கையாளுகிறார்கள்.
ஆழ்வார்கள் கையாண்ட விதத்தில் பரம்பொருளை நாயகனாகவும் அவனோடு ஐக்கியமாக விரும்பும் உயிரை நாயகியாகவும் பாவித்துப் பாடினார்கள். நம்மாழ்வார் தன்னைப் பராங்குச நாயகியாகவும் திருமங்கை ஆழ்வார் தன்னைப் பரகால நாயகியாகவும் பாவித்துப் பாசுரங்களை இயற்றியிருக்கிறார்கள்.
ஸ்ருங்கார ரஸத்தின் மற்றொரு விதம் இறைவனை நாயகனாகவும் இறைவியை நாயகியாகவும் கொண்டது. ஆதி சங்கரரின் ஸௌந்தர்ய லஹரி, சமயக் குரவர் நால்வரின் தேவாரம், திருவாசகம், பிற்காலத்திய அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி முதலிய பக்தி இலக்கியங்களில் ஸ்ருங்கார ரஸத்தைக் கையாளும் போது சிவன் நாயகனாகவும் சக்தி நாயகியாகவும் ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தில் திருமால் நாயகனாகவும் திருமகள் நாயகியாகவும் வைத்துப் பாடப் பட்டிருக்கிறார்கள்.
மேலும் தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களில் உள்ளக் கிளர்ச்சிகளெல்லாம் அடங்கி அமைதியைத் தேடும் நிலையைப் பாடும் போதும் முன்பு இருந்த நிலையை ஸ்ருங்கார ரஸச் சாயலுடன் காட்டி ‘விட்டொழித்தேன்’ ‘துறந்தொழிந்தேன்’ என்று பாடுவது மரபாக இருந்திருக்கிறது. இக் கருத்தைக் கவிஞர் வாலி அவர்களும் ‘வாலிப வாலி’ என்று பொதிகை தொலைக்காட்சி உருவாக்கிய நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டினார். பட்டினத்தார் எல்லாவற்றையும் துறந்தவிட்டு பாடிய பாடல் ஒன்றை அதற்கு உதாரணமாகக் காட்டினார்.
ஆக, இலக்கியத்தில் ஸ்ருங்கார ரஸமும் பெண்ணின் திருத்தன பாரமும் கவிதை நயங்களாகக் கையாளப்படுகின்றன. ஆழ்வார்கள் மரபில் வந்த ஆண்டாள் என்ற பெண்ணிடமிருந்து வெளிப்பட்ட நாயகி பாவத்திற்கு இயற்கையும் ‘கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்’ என அவள் பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த சூழ்நிலையும் ஒருசேர மெருகூட்டியதால் அவளது பாசுரங்கள் ‘பொன் மலர் நாற்றமுடைத்து’ என்கிற தரத்தில் அமைந்ததில் வியப்பேதுமில்லை.
எல்லாப் படிப்புக்களும் பட்டங்களும் தற்காலத்தில் பெருகியிருப்பது போலவே ஆராய்ச்சிப் படிப்புக்களும் பெருகிவிட்டன. ஆராய்ச்சிப் படிப்புக்கள் (Research Studies) சில நேர் எதிரான முடிவுகளைக் காட்டுகின்றன. உறுதி செய்யப்படாத ஆராய்ச்சி அறிக்கைகள் (unconfirmed research reports) என்ற வகையில் பல முரண்பாடான கருத்துக்கள் பதிவுசெய்யப்படுகின்றன. இதற்கு உதாரணமாக ‘காஃபியும் டீயும் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கிறதா, இல்லையா?’ எனவும் ‘செல்ஃபோன் கோபுரத்தால் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைகிறதா, இல்லையா?’ எனவும் காலங்காலமாக நாம் படித்துவரும் மாறுபட்ட கருத்துக்களை எண்ணிப்பார்க்கலாம். எனவே அமெரிக்க எழுத்தாளர் கருத்தைப் பொருட்படுத்தி அதற்கு மிகையான முக்கியத்துவம் கொடுத்து ‘கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்’ என்று அதிர்ச்சி அடையத் தேவையில்லை என்று தோன்றுகிறது.