வஸந்த காலம் வருமோ? நிலை மாறுமோ?

(2013ஆம் ஆண்டில் எழுதப்பட்டது)

கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் வரும்” என்றுதான் எண்ணத் தோன்றுகிறது, நாளும் செய்தித் தாளில் வரும் செய்திகளைப் பார்க்கும் போது. ஒரு வேளை காலன் வரும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்பதைத்தான் காலம் என்று சொல்லி வைத்தார்களோ! இருக்கட்டும், நல்ல காலம் வரும் என்றே நம்புவோம்.

2012ஆம் ஆண்டின் இறுதியில் புதுதில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த இளம் பெண்ணின் நினைவுகளிலிருந்து மீள்வதற்குள்ளாகவே 2013 ஃபிப்ரவரியில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் அமில வீச்சினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கிறார்கள். ஒரு பெண் அமிலத்தினால் முகம் முழுவதும் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் வலியில் துடித்திருக்கிறார். மற்றொரு பெண் இடுப்பிற்குக் கீழ் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் வேதனையில் வெந்திருக்கிறார். இடையிடையே  விபத்துக்களுக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கும் பலியாகும் பிஞ்சுக் குழந்தைகள் பற்றிய செய்திகள் உள்ளத்தைப் பிழிகின்றன. “கோடி துக்கம் ஒரு குழந்தை முகத்தில் மறையும்” என்று எந்தக் குழந்தைகளைக் கொண்டாடுகிறோமோ அந்தக் குழந்தைகளும் எந்த இளம் வயதினரால்  முன்னேற வேண்டும் என்று இந்தியா காத்திருக்கிறதோ அந்த இளம் வயதினரும் சமீப வருடங்களில் மிகவும் கொடுமையாகப் பாதிக்கப்பட்டு பலியாகி வருகிறார்கள். முன்பெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாக மட்டும் நடைபெற்று சில செய்தித்தாள்களில் மாத்திரம் முதல் பக்கங்களில் இடம் பெற்ற “கொலை!”, “கொள்ளை!!”, “பாலியல் பலாத்காரம்!!!” போன்ற செய்திகள் இப்போது நாளும் கொத்துக்கொத்தாக நிகழ்ந்து எல்லா செய்தித்தாள்களின் முதல் பக்க செய்திகளாகவும் முக்கிய செய்திகளாகவும் ஆகிவிட்டன.  இந்த திகைக்க வைக்கும் தருணங்களில் புத்தர் மாதிரி விவேகத்தைத் தேடிப் புறப்பட்டுவிட முடியாதா என்ற ஏக்கம் பிறக்கிறது. ஆனால் புத்தருக்கு இருந்த மன உறுதி நம்மிடம் இல்லாததால்  நாம் எதையும் துறக்க முடியாமல் மேலும் மேலும் உழன்று கொண்டிருக்கிறோம்.

உலகத்திற்கெல்லாம் தாயாக எந்த பராசக்தியை வணங்குகிறோமோ அந்தத் தாய்மைக்கு ஏதுவான  கர்ப்பப் பையும் அதை ஒட்டிய வயிற்றுப் பகுதியும் எவ்வளவு  நுண்மையானவை! பாலியல் பலாத்காரம் என்பதை மறந்து காங்ரீன் உருவாகும் அளவுக்கு ஏற்படுத்தப்பட்ட உடற்காயம் என்று நினைத்துப் பார்த்தாலே அது எப்பேர்ப்பட்ட கொடுமை!

அதைச் செய்தவர்கள் யார்? வேற்று கிரகத்து மனிதர்களா?‘ தீமைகள் செய்ய மட்டுமே’ என்று பிறந்தவர்களா? நம்மைப் போல பிறந்து வளர்ந்து நம்மில் ஒருவராக நடமாடுபவர்கள்தான். ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் ஒரு பாடலில் வருவது போல மனிதர்களே புலியாகவும் ஆடாகவும் மாறி மாறி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். ஒரு வேளை அந்த ஆறு பேர் வேறு ஓர் சந்தர்ப்பத்தில் பஸ்ஸில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்திருந்தால் எழுந்து இடம் கொடுத்திருப்பார்கள். ஒரு முதியவர் தாங்க முடியாத சுமையுடன் பஸ்ஸில் ஏற முற்பட்டால் சுமையை ஒரு கையில் வாங்கிக் கொண்டு இன்னொரு கையால் அவரைப் பஸ்ஸில் ஏற்றி விட்டிருப்பார்கள். சாலை விபத்துக்களின் போது ஓடிச் சென்று உதவியிருப்பார்கள். குடிபோதையிலும் கண நேரத் தடுமாற்றத்திலும் முழு வாழ்க்கையையும் தொலைத்து விட்டுநிற்கும் இவர்களைப் பார்த்தாவது மற்றவர்கள் தங்களைக் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொள்வார்களா?

ஹிந்தி மொழியில் மைதிலி சரண் குப்தா என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். அவர் புராண மற்றும் சரித்திரக் கதா பாத்திரங்களில் மிகவும் உயர்ந்த, ஆனால் அவ்வளவாகப் பேசப்படாத, இலக்குவனின் மனைவி ஊர்மிளாவையும் புத்தரின் மனைவி யசோதராவையும் கதாநாயகிகளாக வைத்துப் படைப்புகளை உருவாக்கினார். அதே போல் மஹாபாரதத்து அர்ஜுனனும் ஒரு நாயகனாக வைத்துப் போற்றத்தக்கவன். மிகவும் உயர்ந்த புராணக்  கதாபாத்திரமான அர்ஜுனனை நாம் உரிய நேரங்களில் உரிய கோணத்தில் ஞாபகப் படுத்திக் கொள்ளத் தவறி விடுகிறோம். ‘பற்றற்று கடமைகளைச் செய்ய வேண்டும்’ எனக் கண்ணன்  உபதேசித்த கீதையைக் கேட்பதற்கு முன் நாம் முதலில் அர்ஜுனனின் மன நிலையிலாவது இருக்க வேண்டுமல்லவா? படிப்படியாகத்தானே மேலே போக முடியும்?  பொதிகை தொலைக்காட்சியில் ‘வாலிப வாலி’  என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ‘எனக்கு மஹாபாரதத்தில் பிடித்த பாத்திரம் அர்ஜுனன்தான்’ என்று  கவிஞர் வாலி அவர்கள் கூறியது என்னுடைய கருத்துக்குக் கிடைத்த ஆமோதிப்பு போல எனக்கு மகிழ்ச்சி உண்டாக்கியது.

‘என்னுடைய உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் முதலியவர்களுக்குத் துன்பம் அளித்து எனக்கு எந்த வெற்றியும் வேண்டாம். எனக்கு அரசாங்கமும் ஆட்சியும் வேண்டாம். நான் யாசித்து உண்டால் கூடப் பரவாயில்லை. என்னால் இவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது.’ என்கிற அர்ஜுனனின் இந்த  மனநிலை கூட எவ்வளவு உயர்ந்தது! அர்ஜுனன் நினைவில் வந்தால் கணவனால் மனைவியைக் கொல்ல முடியாது; விரும்பிய பெண் கிடைக்காதபோது காதலனால் அவள் மீது அமிலம் வீச முடியாது; நண்பர்கள் கத்தியால் குத்திக்கொள்ள மாட்டார்கள்; எளியவர்கள் ஏமாற்றப்பட மாட்டார்கள்; ஆசிரியர்கள் கொல்லப்பட மாட்டார்கள்; நாட்டில் கொலைகளும்  தாக்குதல்களும் கையாடல்களும் சுரண்டல்களும்  நயவஞ்சகங்களும் குறையும்.

’ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை இருக்கிறது’ என்கிறது நியூட்டனின் இயக்கத்திற்கான மூன்றாம் விதி. “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்”   என்ற திருக்குறளும் இந்த விதியைத்தான் கூறுகிறது. நம்முடைய புராணக்கதைகளில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற நீதி வலியுறுத்தப் பட்டிருக்கிறது. பெற்றோர்களும் பள்ளிகளும் பிள்ளைகளுக்கு நீதி நெறிக் கருத்துக்களைப் புகட்டி வந்தால் அவற்றில் சிந்தியது சிதறியது போக மீதமுள்ளவற்றை அனுசரித்து நடந்தாலே  அப்பிள்ளைகளால் எல்லா வயதிலும் அறத்தைக் கடைப்பிடிக்க முடியும்.

ஒவ்வொரு முறையும் அவலங்கள் நடந்த பிறகு அவை  நிகழ்ந்ததற்கான காரணங்களைப் பற்றி சில பேர் கருத்து கூறுகிறார்கள்.

ஹரியானா மாநிலத்தில் தொடராகக் பாலியல் பலாத்காரங்கள் நடந்தபோது அங்குள்ள கப் பஞ்சாயத்தினர் ‘பதினைந்து அல்லது பதினாறு வயதில் திருமணம் செய்துவிடுவதுதான் பாலியல் பலாத்காரங்களை ஒழிப்பதற்கான தீர்வு’ என்றார்கள். அம் மாநில முந்நாள் முதல்வர் திரு ஓம் பிரகாஷ் சௌதாலாவும் அதை ஆதரித்துப் பேசினார். மேற்கு வங்க மாநிலத்தில் அத்துயரங்கள் நிகழ்ந்தபோது முதல்வர் செல்வி மமதா பானர்ஜி ஆண்களும் பெண்களும் முன்பை விடஅதிக சுதந்திரமாகப் பழகுவதால் பாலியல் பலாத்காரங்கள் அதிகமாகின்றன என்றார். புதுதில்லி சம்பவத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தலைவர் இவையெல்லாம் ‘நகரங்களில்தான் நடக்கின்றன, கிராமங்களில் நடப்பதில்லை‘ என்று கூறி பிரச்சினையை மிகவும் எளிமைப்படுத்தி விட்டார். இக்கருத்துக்கள் கண்டனத்துக்குள்ளானதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால் ‘பெண்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்’ என்ற கருத்துக்கள் வெளிப்படும் போதும் கண்டனக் குரல்கள் கிளம்புவதுதான் வியப்பாக இருக்கிறது. “கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்” என்கிற யோசனை பெண்களின் உரிமையைப் பறிப்பதற்காக பெண்களுக்கு மட்டும் கூறப்படும் கருத்து அல்ல.  கடந்த வருடங்களில்  ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து தாக்குதல்களுக்கு ஆளாகி சில  உயிரிழப்புகள் ஏற்பட்ட போதும் ‘இந்தியாவிலிருந்து செல்லும் மாணவர்கள் தங்களது ஐஃபோன் முதலிய விலை உயர்ந்த மின் உபகரணங்களுடன் பொது இடங்களில் ஆரவாரமாக நடந்து கொள்ளும் போது ஆபத்துக்களுக்கு உள்ளாகிறார்கள்’ என்ற கருத்து  கவனிக்கத்தக்கதாக இருந்தது. சாலையில் சில குடிகாரர்கள் ரகளை செய்து கொண்டிருக்கும் போது ’எனக்கு அந்தப் பகுதியிலும் நடக்க உரிமை இருக்கிறது’ என்று விவேகம் உள்ளவர்  அவர்கள் நடுவில் நடந்து செல்வதில்லை அல்லவா?  கூடுமான வரை அந்தக் குடிகாரர்களின்  கவனத்தைக் கவராமல் தற்செயலாக நடப்பது போலத் தங்கள் பாதையை மாற்றித்தானே நடந்து செல்வார்கள்?

உரிமைக்கான குரல்கள் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருக்க உரிமையை விட மேலானதான தன்மானம் பந்தாடப்படும் போது மட்டும் ஏன் அமைதி காக்கப்படுகிறது என்று புரியவில்லை. ஒரு திரைப்படத்தில் ஒரு ஸெல்ஃபோன் கடையில் ‘இது பெண்களுக்கான ஸெல்ஃபோன்’ என்று ஒன்றை எடுத்துப் போடுவார்கள். ‘அதிலிருந்து மிஸ்ட் கால் மட்டும்தான் போகும்’ என்று விளக்கம் தருவார்கள். ஒரு நட்சத்திர எழுத்தாளர் எழுதிய கதையில் வரும் ஒரு பெண் எப்போதும் தன் நண்பனிடம் சொல்லியே தன் ஸெல்ஃபோனை ‘ரீசார்ஜ்’ செய்து கொள்வாள்; இத்தனைக்கும் அவள் அவனுக்கு ‘மிஸ்ட் கால்’ மட்டுமே கொடுப்பாளாம். ‘கிசுகிசு’க்களில் வரும் நடிகைகளும் நகைச்சுவைத் துணுக்குகளில் வரும் காதலிகளும் தங்கள் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி அவர்களின் பணத்தைக் கறப்பார்கள். காலத்தின் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் திரைப்படங்கள், பத்திரிகைகள் முதலிய ஊடகங்கள் விதி விலக்குகளை இலக்கணம் போல் காட்டிச் செல்லக்கூடாது. தனது தன்மானத்தை விட்டுக் கொடுத்து ஆபத்துக்களில் சிக்கிக் கொள்ள எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். அறியாமை காரணமாக எங்காவது நடைபெறும் தவறைத் தற்காலப் பெண்களின் பொதுவான அணுகுமுறை போல் காட்டப்படுவது கண்டிக்கப்படவேண்டும்..

“உன் தலையில் ஆணி அடித்து எழுதப்பட்டிருக்கும் கருத்துக்களைக் களைந்து விடு” என்று ‘பெண்களிடம் கூறப்படும் நவீன கருத்தும் அவர்கள் தலையில் புதிதாக ஆணி அடிக்கும் முயற்சியே. உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற விரும்பும் ஒரு பெண்  முதலில் செய்ய வேண்டிய செயல் தன்னைத் அறிவுத் தேடலில் ஈடுபடுத்திக் கொள்வதே. அறிவு என்பதை மதிப்பெண்களாலும் பட்டங்களாலும் பதவிகளாலும் அளக்க முடியாது. அது உலக நடப்புகளைத் தெரிந்து கொண்டு,  சான்றோர்களின் கருத்துக்களை அறிந்து, தனது சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் ஒரு தொடர் முயற்சி. தன்னைப் பிறர் தவறான வழிக்கு அழைத்துச் செல்லாதிருக்கப் பெண் தன்னைத் தானே தயார் செய்து கொள்ள வேண்டும். எல்லாக் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டுவந்து தனக்கு எது சரியாக இருக்கும்என்று சிந்தித்து ‘அள்ளு அள்ளு, தள்ளு தள்ளு‘ என நல்லதை அள்ளி தேவையற்றதைத் தள்ளித் தன் பாதையை ஒவ்வொரு பெண்ணும் தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ‘கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த சொல்லும் கூட வராது‘ அல்லவா?

குழந்தைகள் மீதும் பெண்கள் மீதும் இழைக்கப் படும் அநீதிகளுக்குப் பலரும் கூறிய பல காரணங்களுக்கிடையில், ‘குடியே எல்லாவற்றிற்கும் காரணம்’ என்ற கருத்தும் கூறப்பட்டது. ஆனந்த விகடனின் தலையங்கத்தில் எழுதியிருந்தது போல் நம் முதல்வரிடம் இருக்கும் பேனாவின் மைத்துளி பூரண மது விலக்கிற்கான நல்லாணையைப் பிறப்பித்தால் எவ்வளவு ஆக்கபூர்வமாக இருக்கும்!

Published by Lalitha Sitaraman

Author of the site is a retired banker, an avid reader, a keen learner and an admired writer. Her subjects of interests include Mathematics, Computer Applications, Languages and much more.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: