(2012ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சிறுகதை)
அக்ஷரா-ஸ்வரா கர்நாடக இசை பாடும் புகழ் பெற்ற சகோதரிகள். அவர்களது அண்ணனும் தம்பியும் முறையே வயலின் மற்றும் மிருதங்க வித்வான்கள். அவர்கள் நால்வரும் ஒருசேர மேடையேறிச் செய்யும் கச்சேரிகள் இசைப் பிரியர்களின் கண்ணுக்கும் காதுக்கும் மனதுக்கும் விருந்தாக அமையும்.
திருமணத்திற்குப் பிறகும் சகோதரிகளின் இசைக் கச்சேரிகள் தொடர வேண்டும் என்று விரும்பிய பெற்றோர் அதற்கேற்றவாறு அதிகக் கவனம் செலுத்தி மாப்பிள்ளைகளைத் தேடத் தொடங்கினர். அவர்களுக்குப் புகழ் பெற்ற திரை உலக இரட்டையர் கவிமணி-இசைமணி வரன்களைப் பற்றிய விவரம் தெரிய வந்தது.
கவிமணி முன்னணி திரைப்படப் பாடலாசிரியர். இசைமணி முன்னணி திரை இசை அமைப்பாளர்.
ஜாதகங்கள் பார்த்த போது அக்ஷரா-கவிமணி மற்றும் ஸ்வரா-இசைமணி பொருத்தங்கள் நன்றாக இருப்பதாகத் தெரிய வந்தன. பரஸ்பரம் இரு வீட்டாருக்கும் பிடித்துப் போகவே இரு திருமணங்களும் ஒரு மாத இடைவெளியில் இனிதே நடந்தேறின.
அக்ஷரா கவிமணியின் பரம ரசிகையும் விமர்சகியுமாக இருந்ததால் அவன் தன் திரைப்படப் பாடல்கள் உருப்பெற்ற பிறகு அவளிடம் காட்டி அபிப்ராயம் கேட்பது வழக்கம். அவளும் உற்சாகமாகத் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு அவனை ஊக்கப் படுத்துவாள். சில சமயங்களில் அப்பாடல்களைக் கர்நாடக இசை ராகங்களில் பாடிக்காட்டி கவிமணியை மகிழ்விப்பாள்.
திரை இசை அமைப்பாளர் இசைமணி ஸ்வராவைப் புதுப்புது இடங்களுக்கு அழைத்துச் செல்வான். அவன் அவளுக்குப் பல நவீன இசைக் கருவிகளை வாங்கிப் பரிசளிப்பது வழக்கம். இசை உலகின் அதி நவீனத் தொழில் நுட்பங்களை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைப்பான். இருவரும் சேர்ந்து நடப்பார்கள், சேர்ந்து சிரிப்பார்கள்.
போகப்போக அக்ஷரா சற்று வித்தியாசமாக உணர ஆரம்பித்தாள். இப்போதெல்லாம் கவிமணி சில பாடல்களை அர்த்தமில்லாத வெற்றுச் சொற்களை இட்டு நிரப்பினான். காதல் பாட்டுகள் என்ற பெயரில் தமிழ்ப் பண்பாட்டுக்கும் இந்தியப் பண்பாட்டுக்கும் ஒத்து வராத கருத்துக்களை வெளிப்படுத்தினான். குடித்துவிட்டுப் பாடி ஆடுவது போன்ற பாடல்கள் வேண்டுமென்று அவனைத் தேடி வர ஆரம்பித்தார்கள். அவளுக்கு அவனது பாடல்கள் இனிக்கவில்லை. அவனும் பாடல்களை அவளிடம் காட்டி கருத்து கேட்பதில்லை. அவர்களுக்கிடையே பாலமாக இருந்த பாடல் மொழி பிசிறடிக்க ஆரம்பித்த பிறகு அக்ஷரா வாடி மெலிய ஆரம்பித்தாள். புகழும் பணமுமே குறிக்கோளாக இருந்த கவிமணி அவளது வாட்டத்தையும் தேய்வையும் கண்டு கொள்ளவில்லை.
இசைமணியின் தொழில் ஆர்ப்பாட்டமாக சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. அவன் ஸ்வராவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தினான்.
அக்ஷராவின் வாட்டம் கண்டு உடன் பிறந்தவர்கள் மனம் வருந்தினார்கள்.
“அக்ஷரா, உன்னுடைய ஏமாற்றம் எனக்குப் புரிகிறது. உன்னுடன் கூடவே இருந்தும் என்னால் உனக்கு எந்த விதத்திலும் உதவ முடியவில்லை. நான் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு உறுத்தலாக இருக்கிறது.” என்று அக்காவிடம் ஸ்வரா அழுதாள்.
“போடீ அசடே, அழாதே. நான் உனக்காக சந்தோஷப்படுகிறேன்.” என்ற படி அக்ஷரா தங்கையின் கண்ணீரைத் துடைத்தாள்.
“நீதான் எனக்கு ஆதாரம், அக்ஷரா. எனக்கு பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’ என்னும் கவிதையின் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன.” என்ற ஸ்வராவின் குரல் தழுதழுத்தது.
“எந்த வரிகள்?”
“’அவள் இருக்கின்றாள் என்ற ஒன்றே போதும்’ என்ற வரிகள்.” என்ற ஸ்வரா விம்மினாள். அவளது கண்ணீர் பெருக்கெடுத்தது..
“கவலைப்படாதே . திரும்பவும் நல்ல காலம் வரும்” எனத் தங்கையை அக்ஷரா தட்டிக்கொடுத்தாள்.